லண்டன்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முதல்முறையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஆல்பா, டெல்டா, ஓமைக்ரான் பாதிப்பின்போது குறைந்தளவு பாதிப்பையே எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக ஆல்பா, டெல்டா, ஓமைக்ரான் தொற்று காலத்தில் 60 சதவீதம் முதல் 94 சதவீதம் நோயெதிர்ப்பு திறனுடன் இருந்துள்ளனர் என்று பிளோஸ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் உள்ள ஸ்டேட்டன்ஸ் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆராய்ச்சியாளர்கள், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை டென்மார்க்கில் உள்ள மக்களின் தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பூசி தரவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தினர்.
மொத்தமாக 2,00,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியப் பின் நோயெதிர்ப்பு திறன் எவ்வாறு உள்ளது என்பது குறித்து கண்காணிக்கப்பட்டுவந்தது. இவர்களுக்கு ஆல்பா தொற்று பரவலின்போது 71 சதவிகிதமும், டெல்டா தொற்று பரவலின்போது 94 சதவிகிதம், ஓமைக்ரான் பரவலின்போது 60 சதவிகிதமும் கூடுதல் பாதுகாப்பை தடுப்பூசிகள் வழங்கியுள்ளன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 9 மாதங்கள் வரை 71 சதவிகித பாதுகாப்பை தடுப்பூசிகள் வழங்கியுள்ளன.