நியூயார்க்:கரோனா பரவலுக்குப் பிறகு டைப்-2 நீரிழிவு நோயால் (Type-2 diabetes) பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை, அமெரிக்காவில் நடைபெற்ற எண்டோ 2023 (ENDO 2023) என்ற மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டது. இதே கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட மற்றொரு ஆய்வறிக்கையில், முந்தைய ஆண்டுகளை விட, கரோனா காலத்தில்தான் கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதில் முதல் ஆய்வை ஓஹியோ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அதில், கரோனா பரவிய முதல் ஆண்டில், குழந்தைகள் பள்ளிக்கு செல்லாதது, விளையாடாமல் சுறுசுறுப்பு இல்லாமல் சோம்பலாக இருத்தல், அதிகளவு சிற்றுண்டிகள் சாப்பிட்டதால் உடல் பருமன் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் குழந்தைகளுக்கு டைப்-2 நீரிழிவு நோய் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கரோனா பரவலுக்குப் பிறகு இளைஞர்களிடையேயும் டைப்-2 நீரிழிவு நோய் அதிகரித்துள்ளது. கரோனா பெருந்தொற்று பரவிய முதல் ஆண்டில், இளைஞர்களிடையே டைப்-2 நீரிழிவு நோய் ஒப்பீட்டளவில் 24.8 சதவீதமாக இருந்ததாகவும், மூன்றாவது ஆண்டில் அது 32.1 சதவீதமாகவும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புக்கு, கரோனா கட்டுப்பாடுகள், வாழ்க்கையில் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் மட்டுமே காரணமாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.