நமது உடலின் எந்த உறுப்பை எடுத்துக்கொண்டாலும் உடலின் சீரான செயல்பாடுக்கு அது முக்கிய பங்காற்றும். அதன்படி இயல்பான வாழ்க்கையை வாழ ஒளியின் அழகினை உணர, இயற்கையை ஆராதிக்க நமக்கு உதவுபவை நம் கண்கள்தாம்.
ஆனால் பலருக்கு அந்த ஆசிர்வாதம் கிடைப்பதில்லை. பிறந்ததில் இருந்தே கண்களில் ஏற்படும் கோளாறு, சில எதிர்பார்காத சம்பவங்கள், விபத்து என பல காரணிகளால் பலர் பார்வையை இழந்துவிடுகின்றனர். நம் கண்களை தானம் செய்வதன் மூலம் பார்வையற்ற பலரின் வாழ்க்கைக்கு நம்மால் ஒளிரூட்ட முடியும்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரையிலான இரண்டு வாரங்கள் தேசிய கண் தான வாரங்களாக அனுசரிக்கப்படுகின்றன. கண் தானம் செய்வதன் முக்கியத்துவத்தையும், இறந்தப் பின் கண் தானம் செய்வதற்கு மக்கள் உறுதிமொழி எடுக்க ஊக்கவிக்க வேண்டும் என்பதன் நோக்கமாகவே இந்தக் கண் தான வாரங்கள் அனுசரிக்கப்படுகின்றன.
கார்னியல் நோய்கள்தான் (கார்னியா எனப்படும் கண்ணின் முன்புறத்தை மறைத்திருக்கும் திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு) கண்பார்வை குறைபாடுக்கு இட்டுச் செல்லும் நோய்களுள் முக்கியமானதாக கருதப்படுகிறது என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.
தேசிய சுகாதாரத் திட்டம் கண் தானம் செய்ய மக்கள் முன்வராததன் காரணங்கள் குறித்து விளக்குகிறது:
- மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாதது.
- பணியாளர்கள் குறிப்பாக பயிற்சி பெற்ற பணியாளர்கள் மத்தியில் உத்வேகப்படுத்துதல் இல்லாமை.
- சமூகம், மதம் சார்ந்த மூடநம்பிக்கைகள்.
மக்கள் சொல்லும் காரணங்கள் என்னென்ன?
"எனது கண்பார்வை தெளிவாக இல்லை, அதனால் என்னால் கண்தானம் செய்யமுடியாது"
விளக்கம்: கண்தானம் செய்வதற்கு குறைபாடுள்ள கண்பார்வை தடையாக இருக்காது. கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்ற காரணங்களுக்காக கண் கண்ணாடி அணிபவர்கள், கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள்கூட கண்தானம் செய்யலாம். வயது, இரத்த வகை, பாலினம் என எந்த காரணங்களும் இதற்கு தேவையில்லை.
"நான் அடுத்தப் பிறவியில் குருடாகப் பிறப்பேன்"