சென்னை:பொதுவான முதன்மை தலைவலி, கழுத்து வீக்கத்துடன் தொடர்பு உடையது என அமெரிக்க ஆராய்ச்சி கூறுகிறது. வட அமெரிக்க கதிரியக்க சங்கத்தின் (Radiological Society of North America) வருடாந்திர மாநாட்டில் வழங்கப்பட்ட ஆய்வின் படி, முதன்மை தலைவலிகளில் கழுத்து தசைகள் எவ்வாறு பங்குகொள்கின்றன என்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சிய்யாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தலைவலிகள், முதன்மை தலைவலி (Primary Headaches), டென்சன் வகை தலைவலி (Tension Type Headaches) மற்றும் ஒற்றை தலைவலி (Migraines) என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் முதன்மை தலைவலிக்கான அடிப்படை காரணங்கள் என்னவென்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத நிலையில், இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
டென்சன் வகை தலைவலி:அமெரிக்காவில் ஒவ்வொரு மூன்று நபர்களில் இருவருக்கு டென்சன் வகை தலைவலி பாதிப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும் டென்சன் வகை தலைவலி தலையில் இறுக்கத்தை ஏற்படுத்தும். மேலும் தலையில் இருபுறமும் மிதமான வலி இருக்கும். இந்த தலைவலி மனஅழுத்தம் மற்றும் தசை பதற்றத்தால் ஏற்படுகிறது.
ஒற்றைத் தலைவலி: தலையில் ஒரு பக்கத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி மிகவும் கடுமையான வலியை ஏற்படுத்தும். ஒற்றைத் தலைவலியால் குமட்டல், ஒளி உணர்திறன், உடல் பலவீனம் போன்றவற்றை ஏற்படுத்தும். அமெரிக்காவில் 37 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுவதாக அமெரிக்க மைக்ரேன் அறக்கட்டளை கூறி உள்ளது. மேலும் உலகளவில் 148 மில்லியன் மக்கள் நாள்பட்ட ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்மை தலைவலி கழுத்து வலியுடன் தொடர்புடையது:முதன்மை தலைவலி கழுத்து வலியுடன் தொடர்புடையது என்பது குறித்த ஆராய்ச்சிக்கு 50 பங்கேற்பாளர்கள் உட்படுத்தப்பட்டனர். பெரும்பாலும் 20 முதல் 31 வயதிற்குட்பட்ட பெண்களே ஆய்வின் பங்கேற்பாளர்களாக இருந்தனர். இந்த ஆய்வுக்குழுவில் உள்ள 16 பேருக்கு டென்சன் வகை தலைவலி இருந்தது. 12 பேருக்கு ஒற்றைத் தலைவலி மற்றும் டென்சன் வகை தலைவலி இருந்தன. மீதமுள்ள 22 பேர் ஆரோக்கியமாக இருந்தனர்.
இவர்கள் அனைவரும் 3D டர்போ ஸ்பின் - எக்கோ எம்.ஆர்.ஐக்கு (3D turbo spin-echo MRI) உட்படுத்தப்பட்டனர். இதனை அடுத்து, T2 தசை மதிப்புகள், கழுத்துவலியின் இருப்பு, தலைவலி நீடிக்கும் நாட்களின் எண்ணிக்கை போன்றவை பங்கேற்பாளர்களின் வயது, பாலினம், உடலின் பிஎம்ஐ ஆகியவற்றின் அடிப்படையில் ஆராயப்பட்டது. தலைவலி நாட்களின் எண்ணிக்கை மற்றும் கழுத்து வலி ஆகியவற்றோடு தசை T2விற்கு தொடர்பு இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. மேலும் கழுத்து தசைகளுக்கான சிகிச்சைகள் கழுத்து வலி மற்றும் தலைவலியை ஒரே நேரத்தில் சரி செய்யும் என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:இரவில் சரியாக தூக்கம் வரலையா? - அப்போ இதுவும் கூட ஒரு பிரச்சினையாக இருக்கலாம்..!