கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, கரோனா தொற்றைக் கண்டறிய பிசிஆர், அண்டிபாடி பரிசோதனைகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டால் 100 விழுக்காடு சரியான முடிவு கிடைக்கும் என உறுதி செய்யப்பட்டதையடுத்து, கேம்பிரிட்ஜ் மருத்துவமனையில் சோதனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
பி.சி.ஆர் சோதனை என்பது வைரஸிலிருந்து ஒரு சிறிய அளவிலான ஆர்.என்.ஏவைப் பிரித்தெடுத்து அதை மில்லியன் கணக்கான முறை நகலெடுத்து, மேற்கொள்ளப்படும் சோதனை ஆகும். இதற்கு மூக்கு, தொண்ட வழியாக மாதிரிகள் சேமிக்கப்படுகின்றன. இருப்பினும், இவர்களுக்கு கரோனா உள்ளது என்பதைக் காட்டும் அறிகுறிகள் தென்பட குறைந்தப்பட்சம் 14 நாள்கள் ஆகின்றன. ஆனால், அதற்குள் கரோனா தொண்டை, மூக்கு பகுதிகளிலிருந்து நுரையீரல் மற்றும் பிற திசு உறுப்புகளுக்கு சென்றுவிடுகிறதால் தொற்றை கண்டறிவது கடினமாகுகிறது. இதனால், தொற்று ஏற்பட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.
அண்டிபாடி பரிசோதனை என்பது ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதும் அதை எதிர்த்து போராட அவரது உடலில் தோன்றும் அண்டிபாடிஸை ஆராய்வது தான். ஆனால், இவை பாதிப்பு ஏற்பட்டு ஆறு நாள்களுக்கு பிறகு தான் தெரியக்கூடும் என்பதால் இந்த சோதனையிலும் சிக்கல் உள்ளது.
எனவே, கேம்பிரிட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் தெரபியூடிக் இம்யூனாலஜி அண்ட் தொற்று நோய் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ரவி குப்தா தலைமையிலான குழுவினர், கரோனாவைக் கண்டறிய புதிய சோதனையை திட்டமிட்டனர். அதன்படி, ஆடன்ப்ரூக் மருத்துவமனையில் உள்ள 45 நோயாளிகளை பிசிஆர் பரிசோதனை, அண்டிபாடி பரிசோதனை ஆகிய இரண்டையும் இணைத்த சிகிச்சை முறையை முயற்சித்தனர். அதன் முடிவில், ஒவ்வொருவருக்கும் மிதமான கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. எனவே, ஆராய்ச்சியாளர்கள் கரோனாவைக் கண்டறிய இரண்டு பகுதிகள் கொண்ட சோதனையை அறிமுகப்படுத்தினார். முதல் பகுதியில் செயற்கையான வைரஸ்கள் சேகரிப்பட்டு அதற்குள் நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரியை கலப்பார்கள்.
இரண்டாம் பகுதியானது மூக்கு, தொண்டை பகுதிகளிலிருந்து எடுக்கப்படும் மாதிரிகளை பரிசோதிப்பது தான். இந்த ஒருங்கிணைந்த சிகிச்சையை மேற்கொண்டதில் பலருக்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. எனவே இவ்வாறு பரிசோதனைகளை மேற்கொள்வதால் அழுத்தம் திருத்தமாக கரோனா பரிசோதனை முடிவுகளைப் பெறலாம்.