சென்னை:தீபாவளி பண்டிகை வந்தாச்சு.. வீடுகளில் விழாக் கோலம் பூண்டாச்சு.. பட்டாசு வாங்கியாச்சு.. முறுக்கு, அதிரசம் பலகாரம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்துகொண்டு இருக்கும். இதற்கு இடையில் இனிப்பு பலகாரம் என்ன செய்யலாம்? எளிமையான முறையில் செய்யும் இனிப்பு பலகாரம் என்ன? ஆரோக்கியமான மற்றும் வித்தியாசமான பலகாரம் என்ன? அப்படி இப்படி என்று உங்களது மூளை பிஸியாக யோசனை செய்துகொண்டு இருக்கும். இவ்வளவு கஷ்டம் எதற்குக் கடைக்குச் சென்று பிடித்தமான இனிப்புகளை வாங்கிவிடலாம் எனவும் பலரும் நினைப்பார்கள். ஆனால் உங்கள் வீட்டில் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து, நிறமிகள், சுவை ஊட்டி போன்ற எவ்வித இரசாயன கலவைகளும் கலக்காமல் ஆரோக்கியமான முறையில் செய்யும் இனிப்பு பண்டங்கள் எங்குக் கிடைக்கும். உழைப்பை எடுத்தாலும் தரத்தில் சமரசம் செய்யாத வகையில் இனிப்பு பண்டங்களைத் தயார் செய்து தீபாவளி பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள்.
பேரிச்சம்பழம் லட்டு: தீபாவளி பண்டிகைக்கு ஆரோக்கியமான பேரிச்சம்பழம் லட்டுவை தயார் செய்யலாம். அதனுடன் உலர் பழங்கள், ஏலக்காய் பொடி உள்ளிட்டவை சேர்த்து அரைத்து லட்டுவை தயார் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பகிர்ந்து உட்கொண்டு பண்டிகையைச் சிறப்பிக்கலாம். பேரிச்சம்பழத்தில் இயற்கையாகவே இனிப்பு உள்ளதால் அதில் சர்க்கரை போன்ற இனிப்பூட்டிகளைச் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால் கொஞ்சம் தேன் சேர்க்கலாம். ஆரோக்கியமான உணவுப் பொருட்களை வைத்து தயார் செய்யப்படும் இந்த பேரிச்சம்பழம் லட்டு உங்கள் தீபாவளி கொண்டாட்டத்தை மேலும் இனிப்பாக்கட்டும்.
ட்ரை நட்ஸ் லட்டு: உலர் பழங்கள் குறைவாகவும், உலர் கொட்டைகள் அதிகமாகவும் சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்த ட்ரை நட்ஸ் லட்டு உங்கள் விருந்தாளிகளின் வாய்களுக்குப் பூட்டுப் போட்டதுபோல் கண் மூடி சுவைக்க வைக்கும். ருசியில் மட்டும் அல்ல ஆரோக்கியத்திலும் ஈடு இணையற்ற இந்த ட்ரை நட்ஸ் லட்டுவில், பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பல உலர் கொட்டைகளைக் கரடு முரடாக அரைத்து அதனுடன் திராட்சை, பேரிச்சம் பழம், அத்திப்பழம் உள்ளிட்டவைகளும் சேர்த்து நெய் கொஞ்சம் சூடாக்கி அந்த கலவையில் கலந்து மணத்திற்கு ஏலக்காய் பொடி சேர்த்து உருண்டை பிடியுங்கள். அவ்வளவு சுவை மிக்க லட்டுவை உங்கள் உறவினர்களுக்குப் பகிர்ந்து மகிழுங்கள்.
கடலைமாவு லட்டு: கடலை மாவில் லட்டு தயார் செய்வது மிகவும் எளிதான ஒரு விஷயம்தான். வட்டமான பாத்திரத்தில் நெய் ஊற்றி அடுப்பில் வைத்து சிறிதளவு சூடான உடனேயே அதில் தேவையான அளவு கடலை மாவைச் சேர்த்து பொன் நிறம் ஆகும் வரை கரிய விடாமல் மிதமான சூட்டில் வருக்க வேண்டும். பொன் நிறமாகும் கட்டத்தில் மேலும் கொஞ்சம் நெய் சேர்த்து அதாவது லட்டு பிடிக்கும் பதத்திற்குத் தேவையான அளவு நெய் சேர்த்து மீண்டும் நன்றாகக் கிளரவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றி, சூடு ஆறும் வகையில் எடுத்து வைக்க வேண்டும். சற்று நேரம் கழித்து அதில் கொஞ்சம் ஏலக்காய் பொடி, வெள்ளை சர்க்கரை பொடி மற்றும் உலர் கொட்டைகளைக் கரடு முரடாக அரைத்து அதன் பொடி மற்றும் குங்குமப் பூ இருந்தால் அதையும் சேர்க்கலாம். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து உருண்டை பிடித்தால் சுவையான கடலை மாவு லட்டு தயார்.
இதையும் படிங்க:வருஷா வருஷம் ஒரே முறுக்கா? வெரைட்டியா ட்ரை பண்ணிப் பாருங்களேன்.!