உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா தொற்று அச்சுறுத்தலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான ஒரே வழியாக தடுப்பூசி ஒன்றே இருக்கிறது. ஆனால், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தகுதி வாய்ந்தவர்களாக குழந்தைகள் இல்லை என்பது கவலைக்குரிய விஷயம் தான். மற்ற எந்த தொற்றையும் போல கரோனா தொற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதே.
எளிதில் நோய் பாதிக்கக்கூடிய மக்களைத் தேடிச் செல்வதே வைரஸின் இயல்பாக இருக்கிறது. கரோனா வைரஸ் தொற்றில் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், 90 விழுக்காடு குழந்தைகள் அறிகுறியற்றவர்களாகவே இருக்கிறார்கள். 10 விழுக்காடு குழந்தைகள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேண்டியவர்களாகவும், 2 முதல் 5 விழுக்காடு குழந்தைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் சிகிச்சை மற்றும் உயர் குழந்தை மருத்துவச் சிகிச்சை அவசியமாக இருக்கிறது.
குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?
பெற்றோர்கள், குழந்தையை சுற்றி இருப்பவர்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் குழந்தையைச் சுற்றி நாம் ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்க முடியும். இதனால் வைரஸ் தொற்று எளிதில் குழந்தைகளைத் தாக்காது.
தொற்று பாதிக்கப்பட்ட குழந்தைகள் அறிகுறி அற்றவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்களால் நோயைப் பரப்ப முடியும். அறிகுறியற்ற குழந்தைகளுடன் எல்லோரும் சகஜமாக பழகலாம், கொஞ்சி விளையாடலாம், சிறுகுழந்தைகள் பெரியவர்களின் மடி, தோள்களில் ஏறி விளையாடலாம். இப்படி நடக்கும் போது தொற்று அறிகுறியில்லாத குழந்தைகள் 'சூப்பர் ஸ்ப்ரெட்டர்'களாக மாறக்கூடும்.
குழந்தைகளுக்கு அசவுகரியமாக இருக்கும் என்பதால், 5 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதில்லை. 2 வயதிற்கு கீழுள்ள குழந்தைகள், குறைபாடுடையவர்களுக்கு முகக்கவசம் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.
கொடிய தொற்றிலிருந்து எது குழந்தைகளை பாதுகாக்கும்?
ஏற்கனவே கூறியது போல, 90 விழுக்காடு குழந்தைகள் அறிகுறியற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் குறைவான அளவில் ஏசிஇ 2 ஏற்பிகளைக் (கரோனா வைரஸ் தொற்று ஒட்டிக் கொண்டு, உடலில் பரவும் பகுதி) கொண்டுள்ளனர்.
குழந்தைகளுக்கு முதல் இரண்டு ஆண்டுகளில்20 முதல் 25 தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அவைகளில் பி செல் மற்றும் டி செல் நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாக உள்ளன. இதனால் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.
அதனோடு பெரியவர்களுக்கு இருப்பதைப் போல, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் குழந்தைகளுக்கு இல்லை. குழந்தைகளின் குடல்நாளம் மற்றும் சுவாச மண்டலத்தில் புதிய செல்களின் மீள் உருவாக்கம் சிறப்பாக இருப்பதால் பெரியவர்களை விட குழந்தைகளால் விரைவாக குணமடைய முடியும்.
அறிந்துகொள்ளுங்கள் தலைகீழ் தனிமைப்படுத்துல்
பெற்றோருக்கே குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு அதிகம் என்பதால், வீட்டில் உள்ள முதியவர்கள் தங்களை தலைகீழ் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக் கொள்ளலாம். அதாவது, தொற்று பாதித்த குழந்தையை ஒரு தனி அறையில் அடைத்து தனிமைப் படுத்தி அதன் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தங்களை வேறு அறைகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
நமது சமூக அமைப்பில், குழந்தைகளுக்கு பெற்றோர், தாத்தா பாட்டி என குழந்தைக்கு உணவு ஊட்டுவர். அப்படி இருந்தால், தொற்று இருக்கும் 10 நாட்களுக்கும், குழந்தையை ஒருவர் மட்டுமே பராமரிக்க வேண்டும். அது பொற்றோர்களாகவே இருக்க வேண்டும். அவர்களும், முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் போன்ற கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்.