சென்னை: கணவன், மனைவி இடையே அன்பை வெளிப்படுத்திக்கொள்ள ஆயிரம் வழிகள் இருந்தாலும் அதில் மிக முக்கியமான ஒன்று உடலுறவு. இதை அருவருப்பானதாகவோ, வெளியில் பேசத் தயக்கம் கொள்ளும் விஷயமாகவோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் இந்த உடலுறவு குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் இருந்தாலும், கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? அல்லது கூடாதா? என்ற கேள்வியும், சந்தேகமும் ஏராளமான தம்பதிகள் மத்தியில் இருந்து வருகிறது.
ஆனால் இந்த சந்தேகத்தை மனத்தில் வைத்துப் புலம்பிக்கொள்ளும் அவர்கள், இது குறித்து மருத்துவரை அணுகி ஆலோசனை பெறத் தயங்கும் சமூகம் இன்றளவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த கர்ப்ப கால உடலுறவு குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறிய பொதுவான சில தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் உடலுறவு:கர்ப்ப காலத்தில் தம்பதிகள் உடலுறவு கொள்வதில் எந்த வித பிரச்சனையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த நேரத்தில் உடலுறவு கொள்வது தாயிக்கும், குழந்தைக்கும் மிக ஆரோக்கியமானது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், தாயின் வயிற்றில் அழுத்தம் ஏற்படாத வகையில் உடலுறவு கொள்ளுங்கள். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதால் ஆபத்தா? கர்ப்ப காலத்தில் உடலுறவுக் கொண்டால், கருச்சிதைவு ஏற்படும், குறை மாதத்தில் குழந்தை பிறக்கும் என்றெல்லாம் சொல்லிக்கேட்டிருப்போம். ஆனால் இவை முற்றிலும் தவறான கருத்து என மருத்துவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். நீங்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளும்போது பெண்களுக்கு யோனியில் அருகில் வலி மற்றும் அசவுகரியம் ஏற்படலாம், அது இயல்பான ஒன்றுதான். ஆனால் அதைத் தாண்டி எந்த வித பக்கவிளைவுகளோ அல்லது பிரச்சனைகளோ இல்லை என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆரோக்கியத்தில் தெளிவு பெருங்கள்:கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பது பொதுவான கருத்து. ஆனால், கர்ப்பிணிப் பெண்ணின் ஆரோக்கியம் மற்றும் உடல்நிலை சரியாக உள்ளதா? என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் ஆனால், உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தில் சிறிதளவு சந்தேகமும் கொள்கிறீர்கள் என்றால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றபின் உடலுறவுக் கொள்ளுங்கள்.