கரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள ஒருபுறம் மக்கள் ஆவலுடன் காத்திருந்தாலும், மற்றொரு சாரர் அது குறித்து அச்சத்திலேயே உள்ளனர். இந்தத் தடுப்பூசிகளால் ஏற்படும் சாதகமான மற்றும் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள மக்கள் பயப்படுகின்றனர். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளும் அதற்கு ஒரு காரணம். வெறும் பார்வேர்ட் மெசேஜுகளாக வரும் பொதுவான கட்டுக்கதைகளை ஆராய்ந்து அறிய ஈடிவி பாரத் சார்பில் யசோதா மருத்துவமனையின் பொது மருத்துவர் எம்.வி ராவ் உடன் பேசினோம்.
கரோனா தடுப்பூசி அனைவரும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டுமா?
அனைவரும் கரோனா தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ள வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. விருப்பமுள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து செலுத்திக் கொள்ளலாம். ஒருமுறை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த வைரஸை எதிர்கொள்ளும் ஆன்டிபாடிகள் மேம்பட்டிருக்கும். வைரஸுக்கு எதிரான எதிர்ப்புச்சக்தி அதிகரித்திருப்பதால், அவர்களுக்கு மீண்டும் கரோனா வர வாய்ப்பு குறைவு. ஆனால் இது நிரந்தரம் அல்ல. கரோனா வைரஸிடமிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசிகள்தான் சிறந்த உத்தரவாதம்.
தடுப்பூசி செலுத்தாவிடில் ஏற்படும் விளைவுகள்?
கரோனா வைரஸ் பிறழ்ந்து, உடலில் பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக வயதானவர்களுக்கு துணைநோய்கள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். அதாவது நிரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். கரோனாவை முழுமையாகக் குணப்படுத்த சிகிச்சை ஏதும் இல்லை. சில தெளிவில்லாத உடல் உபாதைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவே கரோனா தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
கரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தடுப்பூசி போடலாமா?
நிச்சயமாகச் செலுத்தக் கூடாது. தடுப்பூசி செலுத்தும் முன்னர் அவருக்கு கரோனா அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை சோதித்து அறிவது அவசியம். கரோனா அறிகுறிகள் இல்லாதவருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தவேண்டும். ஒருவேளை ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாக இருக்கும் பட்சத்தில், அவர் 4 முதல் 8 வாரங்கள் கழித்து முழுமையாக குணமடைந்த பின்னரே தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். இல்லையெனில் பக்கவிளைவுகள் ஏற்படும்.
எத்தனை தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளவேண்டும்?
28 நாள்கள் இடைவெளியில் இருமுறை ஒரே அளவில் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஒரு முறை மட்டுமே தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டால், கரோனாவுக்கு எதிராக நோயெதிர்ப்புச்சக்தி 60 முதல் 80 விழுக்காடுதான் இருக்கும். கரோனாவுக்கு எதிரான முழு பாதுகாப்பிற்கு இரண்டு தடவை தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். ஒருவேளை இரண்டாவது முறை தடுப்பூசி போட்டுக் கொள்ள கால தாமதமாகிவிட்டால் கூட, முடிந்தவரை சீக்கிரமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு நபர் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துடன் சேர்ந்து கரோனா தடுப்பூசி தாக்கத்தை ஏற்படுத்துமா?
கரோனா தடுப்பூசி அதுபோல எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர் ஒருவேளை ஊக்கமருந்துகள் பயன்படுத்துவாராயின், தடுப்பு மருந்தால் அதிக எண்ணிக்கையிலான ஆன்டிபாடிகளை உருவாக்க இயலாது.
மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கரோனா தடுப்பூசியைத் தவிர்க்கலாம். தவிர்க்க முடியாதபட்சத்தில் தங்கள் மருத்துவரின் ஆலோசனையை நாடலாம்.
கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போடலாமா?