சென்னை:இன்றைய காலக்கட்டத்தில் உடல் உழைப்பு என்பது முற்றிலுமாக குறைந்துவிட்டது. உட்கார்ந்த நிலையில் கம்ப்யூட்டர் முன் வேலை, அருகில் உள்ள கடைக்கு செல்லும் போது கூட பைக் அல்லது காரை எடுத்து செல்வது போன்றவை நம்மை சோம்பேறியாக்கி விட்டது மட்டுமில்லாமல் நோயாளியாகவும் ஆக்கிவிட்டன.
இந்த வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் நோய்க்கு, மருத்துவரை அணுகினால் மருத்துவர், உங்கள் வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சியையும், உடற்பயிற்சியையும் சேர்த்துக்கொள்வது கட்டாயம் என்று கூறுவர். அவர் கூறியதின் பேரில் உற்சாகத்துடன் இரண்டு நாட்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்வோம். அதன் பின் எந்த மாற்றமும் இல்லை என்று நிறுத்திவிடுவோம்.
உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அதை செவ்வனே செய்வது தான் முக்கியம். பேசிக்கொண்டே மெதுவாக நடப்பதைக் காட்டிலும், வேகமாக நடைப்பயிற்சி மேற்கொண்டால் அதிக பலன்களை பெற முடியும். உடல்நலத்தை பாதுகாக்க வேகமாக நடைப்பயிற்சி மேற்கொண்டாலே போதும் என தற்போதைய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டு உள்ளது. வேகமாக நடப்பதன் மூலம் அதீத பலன்களை பெற முடியும்.
ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 337 அடிகள் நடப்பது இதய நோயால் ஏற்படும் இறப்பின் அபாயத்தை குறைப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் அடிகள் நடப்பது சர்க்கரை நோய் அல்லது வேறு ஏதேனும் நோயால் உயிரிழக்கும் அபாயத்தை குறைப்பதாக மற்றொரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஏரோபிக் மற்றும் ரெசிஸ்டன்ஸ் பயிற்சி (Aerobic and Resistance Exercises) அதாவது சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், ஓடுதல், ஜிம் கார்டியோ வாஸ்குலார் இயந்திரங்களான கிராஸ் ட்ரெய்னர்கள் போன்றவற்றை மேற்கொள்வது நீரிழிவு நோயின் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். இந்த வகையில் வேகமாக நடைப்பயிற்சி மேற்கொள்வதால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும்.
அதாவது மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் நடப்பவர்களைக் காட்டிலும் மணிக்கு 5-6 கிலோமீட்டர் வேகத்தில் நடப்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 24 சதவீதம் குறைவு என்று ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. மெதுவாக நடந்தால் பலன் இல்லை என்று கூறவில்லை. மெதுவாக நடப்பதை விட வேகமாக நடப்பதால் அதிக பலன்களை பெற முடியும். வேகமான நடைப்பயிற்சி மேற்கொள்வது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடல் சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் ஞாபக சக்தியும் மேம்படும்.
இதையும் படிங்க:கழுத்து வலிக்கும் - தலைவலிக்கும் தொடர்புண்டா?... - ஆய்வு என்ன கூறுகிறது!