கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்குத் தங்களது உடலுக்கு வலுவூட்ட சப்ளிமென்ட் மாத்திரைகளை (supplement pills) மட்டும் எடுத்துக் கொள்வது எளிதான வழியாகத் தோன்றலாம். ஆனால் அதுவே சரியான முடிவா? என ஆராய்ந்தால் நிச்சயம் ‘சப்ளிமென்ட் மாத்திரைகளுக்கு’ நோ தான் சொல்வீர்கள்.
உடல்நலக் குறைவினால் ஏற்படும் பசியின்மையை மாற்றுவதும், தேர்வுசெய்யப்பட்ட ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதுமே சரியான முடிவாக இருக்கும் என்கிறார் ஊட்டச்சத்து வல்லுநரும்,மருத்துவருமான ரேணு கார்க். இது தொடர்பாக அவரிடம் விரிவாகப் பேசினோம்.
கரோனா பாதிக்கப்பட்டவர்களே கவனம்!
கரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துவருபவர்களுக்கு, தங்களது உடலின் உறுதியை வலுப்படுத்த அதிகளவில் வைட்டமின்கள் தேவைப்படும். இவர்களுக்கு வைட்டமின் ஏ, டி, ஈ முதலியவையும், மெக்னீசியம், துத்தநாகம் (zinc) போன்ற தாதுச்சத்துகளும் அதிகம் தேவைப்படும். இந்தச் சத்துகள் அடங்கிய உணவுகள் உங்களது ஆரோக்கியத்தைத் திருப்பித் தருவதோடு, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
இந்த டையட்டை நோட் பண்ணிக்கங்க
- ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளும் புரதத்தின் அளவு 75 முதல் 100 கிராம் வரை இருக்க வேண்டும். கரோனா பாதிக்காத நபருக்குத் தேவைப்படுவதைவிட இந்த அளவு ஒன்றரை மடங்கு அதிகம்.
- பருப்பு வகைகள், தானியங்கள், வேர்க்கடலை, பாதாம், பால், பால் சார்ந்த பொருள்கள், கடலைமாவு, கேழ்வரகு மாவில் செய்த பதார்த்தங்கள், பன்னீர், சோயா, முட்டை, மீன், இறைச்சி, கோழி, வெள்ளை எள் ஆகிய பொருள்களை உண்பதால் புரதச்சத்து அதிகரிக்கும்.
இந்த உணவில் ஊட்டச்சத்து அதிகம் இருக்கு
- பருவத்திற்கு ஏற்றபடி, காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான காய்களை எடுத்துக் கொள்ளாமல், அதன் நிறத்தின் அடிப்படையில் காய்கறிகளைத் தேர்வுசெய்யலாம்.
உதாரணமாக, சாம்பார் எனில் கேரட் (ஆரஞ்சு), பீன்ஸ் (பச்சை), கத்தரி (வெள்ளை (அ) கரு ஊதா), உருளை, விரும்பும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். காய்கறிகளிலும், பழங்களிலும் அதிகளவில் வைட்டமின்கள் இருப்பதால் விரைந்து குணமாக உதவும்.
- அதிக ஆற்றலைக் கொடுக்கும் முழு தானியங்கள், கோதுமை பிரெட், உருளைக்கிழங்கு, பாஸ்தா, அரிசி, வெல்லம், வறுத்த கொண்டைக்கடலை ஆகிவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள கேழ்வரகு, சோயாபீன், பால், பால் பொருள்கள், அத்தி, திராட்சை போன்றவற்றை எடுப்பது அவசியம்.
- ஆரஞ்சு, எலுமிச்சை, ஸ்வீட் லைம், கொய்யா, காட்டு நெல்லிக்காய், பிராக்கோலி, பெல் பெப்பர், தக்காளி, பச்சை மிளகாய், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதால் வைட்டமின் சி மிகுதியாகக் கிடைக்கும்.