ஈடிவி பாரத் உடனான ஒரு தொலைபேசி நேர்காணலில், அமெரிக்காவின் டெட்ராய்டைச் சேர்ந்த முன்னணி விஞ்ஞானி டாக்டர் மடிபதி கிருஷ்ண ராவ், “புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம், ஓமேகா-3 கொழுப்பு நிறைந்த அமிலங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்” என்றும் கூறினார்.
கரோனா வைரஸ் போன்ற கொடிய தாக்குதலிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும். இந்த வைரஸ் நம் உடலுக்குள் நுழைந்தால் அதைச் சமாளிக்கவும் எதிர் தாக்குதல் நடத்தவும் நம் உடலில் திறன் உள்ளதா என்பதை நாம் குறிப்பாக ஆராய முயற்சிக்க வேண்டும். கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள என்னென்ன செய்யலாம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது எப்படி? இரத்த வெள்ளை அணுக்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அமெரிக்காவின் டெட்ராய்டைச் சேர்ந்த முன்னணி விஞ்ஞானி டாக்டர் மடிபதி கிருஷ்ண ராவ் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடன் நடந்த நேர்காணல் விபரம் வருமாறு:
- குணப்படுத்தும் செயல்முறை
உடல் ரீதியாக காயமடையும் போது, உடலில் இருக்கும் வெள்ளை இரத்த அணுக்கள் இறந்த செல்களை அகற்ற முயற்சிக்கின்றன. மேலும் நோய்க்கிருமிகள் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்றவை உடலுக்குள் நுழையும் போது, வெள்ளை இரத்த அணுக்கள் நோய்க்கிருமிகளை உடலில் இருந்து வெளியேற்றும்.
இரண்டு சந்தர்ப்பங்களிலும், நோய்க்கிருமிகளை குணப்படுத்துவதற்கும் வெளியேற்றுவதற்கும் இந்த செயல்முறை அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது உடலின் சேதமடைந்த பகுதியை குணப்படுத்தும் செயல்முறையாகும். இது நடக்கவில்லையென்றால் உள்காயம் ஆறாது. வீக்கம், வலி, சிவத்தல், காய்ச்சல் பொன்ற அறிகுறிகள் ஏற்படும்.
- தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் அழித்தல்
வைரஸ்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் உடலில் நுழையும்போது, வெள்ளை இரத்த அணுக்கள் உடனடியாக அந்த வைரஸ்களுக்கு எதிராகப் போராடும். இரத்த சிவப்பணுக்கள் ஒரு வகை மட்டுமே உடலில் உள்ளது. ஆனால் இரத்த வெள்ளை அணுக்களில் பல வகைகள் உள்ளன.
இந்த அணுக்களில் ஒவ்வொரு வகையும் ஒரு தனித்துவமான பணியை செய்கிறது. சில வெள்ளை இரத்த அணுக்கள் வடிகட்டப்பட வேண்டிய சில வைரஸ்களை எடுத்துச் செல்கின்றன. சில செல்கள் வைரஸை வெளியேற்றுவதற்காக செயல்படுகின்றன. சில அணுக்கள், செல்கள் சேதமடைந்த உறுப்பு பகுதியில் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைச் செய்கின்றன. பொதுவாக இரத்த வெள்ளை அணுக்கள் நுரையீரல், செரிமான அமைப்பு போன்ற உடலின் வெவ்வேறு இடங்களில் நிலைநிறுத்தப்பட்டு அந்தந்த செயல்பாடுகளைச் செய்கின்றன.
- வீக்கம்
மனித உடலில் நுழையும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழிக்க, ஒரு பெரிய செயல்பாட்டு வழிமுறைகள் நடைபெறுகிறது. முதலாவதாக, ஒமேகா- 6 கொழுப்பு அமிலங்கள் புரோஸ்டாக்லாண்டின்கள் மற்றும் லுகோட்ரியன்கள் எனப்படும் சேர்மங்களை வெளியிடுவதன் மூலம் செயல்படத் தொடங்குகின்றன. இந்த கலவைகள் வெள்ளை இரத்த அணுக்களை ஈர்க்கின்றன. உடனே ஒரு வகை வெள்ளை இரத்த அணுக்கள் அங்கு நுழைகின்றன. மற்ற வெள்ளை இரத்த அணுக்களை ஈர்க்க சைட்டோகைன்கள் எனப்படும் புரத மூலக்கூறுகளை அவை வெளியிடுகின்றன.
சைட்டோகைன்களிலும் பல வகைகள் உள்ளன. சிக்கல் உள்ள உறுப்பில் வேலை செய்யும் வெள்ளை இரத்த அணுக்களை ஈர்க்க சைட்டோகைன்கள் வெளியிடப்படுகின்றன. வெள்ளை இரத்த அணுக்கள் வந்து நுண்ணுயிரிகளை துண்டுகளாக உடைக்கின்றன. தீங்கு விளைவிக்கும் உயிரினங்களை வடிகட்டுதல் மற்றும் வெளியேற்றும் செயல்முறையின் ஒரு பகுதியாக அவை மிகவும் சக்திவாய்ந்த மற்றும் கொடிய இரசாயனங்களை வெளியிடுகின்றன. வெள்ளை செல்கள் வெளியிடும் இந்த இரசாயனங்கள் நம் வீடுகளை சுத்தம் செய்வதில் நாம் பயன்படுத்தும் வழக்கமான ப்ளீச்சிங் பவுடரை விட மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. எனவே, சில நேரங்களில், அந்த இரசாயனங்கள் ஒரு மனித உடலில் உள்ள சாதாரண செல்களைக் கூட சேதப்படுத்தும். இந்த முழு செயல்முறையும் வீக்கம் என்று அழைக்கப்படுகிறது.
- வீக்கத்தைக் குறைக்கும் காரணிகள்
தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கும் செயல்பாட்டில் அழற்சி உச்ச நிலையை அடைகிறது. காயம் குணமாகிவிட்டதாகத் தோன்றும்போது, வீக்கத்தை ஏற்படுத்தும் வெள்ளை இரத்த அணுக்கள் மெதுவாக அவற்றின் தோற்றத்தை மாற்றுகின்றன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களால் வெள்ளை செல்கள் மீண்டும் வடிவம் பெறுகின்றன.
கொழுப்பு அமிலங்களால் வெளியிடப்படும் சில வகையான கூறுகள், வீக்கத்தைக் குறைக்கும். இந்த செயல்முறை 'அழற்சி தீர்மானம்' அல்லது 'ஒமேகா -3 கொழுப்பு அமிலத் தீர்மானம்' என அழைக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், மனித உடலில் ஒமேகா -3 கொழுப்புகள் போதுமானதாக இல்லாவிட்டாலோ அல்லது உடலில் ஏற்படும் அழற்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய சேர்மங்களின் வெளியீட்டில் சிக்கல்கள் இருந்தாலோ, வீக்கத்தின் செயல்முறை தொடர்ந்து இடைவிடாது. இந்த நிலைமை ஒரு குறிப்பிட்ட நபரின் ஆரோக்கியத்தில் மேலும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
- சைட்டோகைன்கள்
உடலில் கட்டுப்பாடற்ற அழற்சி ஏற்படுவதால் பல ஆபத்துகள் உள்ளன. இதய நோய், புற்றுநோய் மற்றும் கீல்வாதம் போன்ற பல வியாதிகள் வீக்கத்தில் கட்டுப்பாடு இல்லாததால் ஏற்படுகின்றன. அவை நாள்பட்ட அழற்சி நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு 100 புற்றுநோயாளிகளிலும் சுமார் ஐந்து பேர் மரபணு பாதிப்புக்குள்ளானால், மீதமுள்ள 95 பேருக்கு ஏதேனும் ஒரு வகை அழற்சியால் மட்டுமே நோய் வந்துள்ளது.
கோவிட் -19 நோயாளிகளைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சுமார் 90-95 சதவிகிதத்தில், நோயாளியின் உடலில் இருக்கும் வெள்ளை இரத்த அணுக்கள் வைரஸைக் கொல்வதில் வெற்றிகரமாக உள்ளன. மேலும் இந்த செயல்பாட்டில், நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி அளவும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், மீதமுள்ள 5-10 சதவிகித நோயாளிகள் கட்டுப்பாடற்ற அழற்சியால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மரணம் நிகழவும் வாய்ப்புகள் உள்ளது. அப்போது சைட்டோகைன்கள் எழுச்சியாக பங்களிக்கின்றன. இது ‘சைட்டோகைன் புயல்’ என்று அழைக்கப்படுகிறது.
- நீர்வாழ் தாவரங்கள் மற்றும் ஒமேகா -3