சென்னை: குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது அவர்களுக்கு என்ன மன அழுத்தம் வந்துவிடப்போகிறது என நினைக்க வேண்டாம். பெற்றோரின் அறியாமை இங்குப் பல குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக் குறியாகக் காரணமாகி இருக்கிறது.
உங்கள் குழந்தையின் முகத்தில் இயல்பான புன்னகை இல்லையா? மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து ஒன்றாக விளையாடச் செல்வது இல்லையா? எப்போதும் அமைதியாக எதையாவது சிந்தித்தவாறு இருக்கிறார்களா? அறையில் தனியாக உட்காரவோ அல்லது தனிமையை விரும்பும் குழந்தையாகவோ இருக்கிறார்களா? கட்டாயம் அவர்களுக்குள் ஏதாவது மன அழுத்தம் இருக்கலாம்.
அதை ஆரம்பக்கட்டத்திலேயே தெரிந்துகொண்டு நிவர்த்தி செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. இன்றைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் அல்ல குழந்தைகளும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். குடும்ப ரீதியாக, சமூக ரீதியாக, கல்வி ரீதியாக எனப் பல இடங்களிலும், பல சூழல்களிலும் குழந்தைகள் பிரச்சனைகளை எதிர்கொண்டு அதன் காரணமாக மன அழுத்தம் அடைகின்றனர்.
குழந்தைகளுக்கான மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம்:குழந்தைகளுக்கு மனம் அழுத்தம் ஏற்பட முக்கிய காரணம் என்று சொன்னால், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் இடைவெளிதான் என மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர். இன்றைய சூழலில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, கல்விக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போராடும் பெற்றோரும் சரி, வசதி இருந்தும் தங்களின் விருப்பத்திற்காக வேலைக்குச் செல்லும் பெற்றோரும் சரி, வீடுகளில் உள்ள குழந்தைகளுடன் தங்களுக்கான தனிப்பட்ட நேரத்தைச் செலவிடத் தவறுகிறார்கள்.
இதனால், கல்வி ரீதியான மன அழுத்தம் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் ஏற்படும் மன அழுத்தத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் குழந்தைகள் தங்கள் கழுத்தை நெரிப்பதுபோன்ற உணர்வைச் சந்தித்து கடைசியில் தற்கொலை செய்துகொள்ளும் நிலையும் ஏற்படுகிறது.
குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கப் பெற்றோர் செய்ய வேண்டியது;உங்கள் குழந்தைகளுடன் போதுமான நேரத்தைச் செலவிடுங்கள். அவர்கள் சந்திப்பது உங்கள் அனுபவத்திற்குச் சிறிய பிரச்சனையாகத் தெரியலாம். ஆனால் அது குழந்தைகளுக்குப் பெரிய பிரச்சனையாகத் தோன்றும். அந்த சூழலில் குழந்தைகளிடம் கூறுங்கள் " உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் நான் இருக்கிறேன்.. தைரியமா இரு.. அப்பா பாத்துப்பேன்.. அல்லது அம்மா பாத்துப்பேன்" என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தை அவர்களின் மனதிற்குப் புத்துணர்ச்சியும், புதிய நம்பிக்கையும் வழங்கும் என உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
குழந்தைகளின் சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்;குழந்தைகள் ஏதேனும் பிரச்சனையில் இருந்தால் அவர்களைத் திட்டியோ அல்லது மிரட்டியோ அச்சுறுத்தாமல் மெதுவாக அவர்களின் மனதில் இருக்கும் பிரச்சனையைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அதனைத் தொடர்ந்து "அந்த பிரச்சனை வெறும் ஜூஜூபி மேட்டர்.. இதுக்கா இவ்ளோ ஃபீல் பன்னுறே" என அவர்களின் மொழியிலேயே உங்கள் அறிவுரைகளை எடுத்துக்கூறுங்கள்.
அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையை உங்கள் வாழ்கையில் நடந்த மற்றொரு பிரச்சனையுடன் ஒப்பிட்டு அதை எப்படிச் சமாளித்து வந்தீர்கள் என்ற அனுபவ கற்றலை எடுத்துக்கூறுங்கள். அது மட்டும் இன்றி வாழ்க்கை என்றால் பல பிரச்சனைகள் வரத்தான் செய்யும் அதைச் சமாளித்து ஜெயிப்பவர்களுக்குத்தான் வாழ்க்கை முதல் பரிசை வழங்கும் எனச் சொல்லிக்கொடுங்கள்.