சென்னை:நமது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஊட்டச்சத்துக்களில் நார்ச்சத்துக்கு ஒரு தனி இடம் உண்டு. தாவரங்களில் ஜீரணிக்க முடியாத ஒரு பகுதியான நார்ச்சத்து, கரையக்கூடிய நார்ச்சத்து (Soluble fiber), கரையாத நார்ச்சத்து (insoluble fiber) என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து என்பது நீரில் கரையக்கூடியதாகும்.
நன்மையளிக்கக் கூடிய நார்ச்சத்து: நார்ச்சத்து நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. மேலும் பலவகையான நோய்களைத் தடுத்து, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது, கொழுப்பை குறைக்கிறது, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
சிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சிறிது காய்கறிகள் மற்றும் பழங்களை உண்டு வருவர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு மீண்டும் பசி எடுக்கும். ஆகையினால் மீண்டும் சாப்பிடுவார்கள். இதுவே நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது, வயிறு முழுமையடைந்தது போல் தோன்றும். ஆகையினால் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:நமது உணவில் கண்டிப்பாக நார்ச்சத்து இருக்க வேண்டும். பீட்ரூட், காலி பிளவர், கேரட் முட்டைகோஸ் ஆகியவற்றில் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, கோதுமை ஆகியவற்றில் கரையும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது. பழச்சாறுகளை குடிப்பதற்கு பதிலாக, பழங்களாகவே சாப்பிட்டால் அதிகளவு நார்ச்சத்து கிடைக்கும். பேரிக்காயில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.