நம் முன்னோர்கள் நாள்தோறும் பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி, வரகு, தினை, சாமை உள்ளிட்டவற்றைச் சாப்பிட்டுவந்தனர். இதன்மூலம் கிடைத்த வலிமையால்தான் நாம் ஆங்காங்கே 100 வயதைக் கடந்த முதியவர்களைக் காண முடிகிறது.
தற்போதுள்ள துரித உணவு வகைகள், பீட்சா, பர்கர் போன்றவற்றைச் சாப்பிட்டு இளம் வயதிலேயே பல நோய்களுக்கு உள்ளாகிவருகின்றனர். இக்கால இளைஞர்களுக்கே சவால்விடும் அளவிற்கு முதியவர்கள் தற்போதும் இருந்துவருகின்றனர்.
இவ்வாறு நம் முன்னோர்கள் உணவாகப் பயன்படுத்திவந்த கேழ்வரகின் நன்மைகள் குறித்த சிறிய விளக்கத்தை இந்தத் தொகுப்பின் மூலம் அறியலாம்.
தற்போதுள்ள காலக்கட்டத்தில் நமக்கு இருக்கும் பிஷியான செடுல்களில் நமது உடல் மீது அக்கறை காட்டுவதில்லை. நமது உடலில் ஏதேனும் நோய்கள் தாக்கிய பிறகுதான் நாம் ஊட்டச்சத்து வல்லுநர்களைத் தேடிச் செல்கிறோம்.
சத்தான உணவு கேழ்வரகு
அங்குள்ள வல்லுநர்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்வதற்குப் பதிலாக, ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும் உடற்பயிற்சி செய்யவும் பரிந்துரைக்கின்றனர்.
உடற்பயிற்சியைப் போலவே, சீரான, சத்தான உணவும் ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. சத்தான உணவு என்றவுடன் நாம் புது புது உணவுகளைத் தேடிச் செல்கிறோம்.
ஆனால், அது எடை இழப்புக்கு உதவலாம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் எதிர்மறையான முறையில் பாதிக்கக்கூடும். எனவே, ஒரு குறிப்பிட்ட உணவுக்கு மாறுவதற்குப் பதிலாக, நாம் சத்தான உணவான கேழ்வரகு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
கேழ்வரகு மிகவும் சத்தான உணவு, நமது எடையைக் குறைக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். கேழ்வரகைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே...
கேழ்வரகின் பயன்கள்
- கேழ்வரகில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை அதிகம் சாப்பிடுவதால், ரத்த சோகை நோயை குணப்படுத்த முடியும். கேழ்வரகு சாப்பிடுவதால் இயற்கையாகவே அது உடலை ஓய்வுபெறச் செய்யும். நமது முக்கிய நோயான கவலை, மன அழுத்தம், தூக்கமின்மையை எளிதில் போக்க உதவுகிறது.
- இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, இரும்பு, கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புரதம், நார்ச்சத்து, போதுமான கலோரிகள், நல்ல கொழுப்பு ஆகியவை உள்ளன.
- கேழ்வரகில் உப்புமா, இட்லி, சப்பாத்தி செய்து காலை உணவாக எடுத்துக்கொண்டால் நாள் முழுவதும் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். மேலும், நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- இரவு நேரத்தில் கேழ்வரகு சாப்பிடுவது, குறிப்பாக செரிமான கோளாறு இருப்பவர்களுக்கு நல்லது இல்லை. இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- கேழ்வரகு பொதுவாக அரைத்த அல்லது முளைத்த வடிவத்தில் உட்கொள்ளப்படுகிறது. கேழ்வரகு மாவிலிருந்து சப்பாத்தி, புரோட்டா செய்யலாம்.
- இதில் பல்வேறு அமினோ அமிலங்கள் உள்ளதால், அவை நம் தோல், பற்கள், ஈறுகள், தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
- இந்த கேழ்வரகு குழந்தைகளில் எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் வயதானவர்களுக்கு எலும்பு அடர்த்தியை மேம்படுத்துகிறது. இது ஆஸ்டியோபோரோசிஸின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
- நார்ச்சத்து அதிகம் இருப்பதால், எடை இழப்பு, நீரிழிவு, உடல் பருமனுக்கு நன்மை பயக்கும். கர்ப்பிணிகள், கேழ்வரகு சாப்பிடுவதால் அவர்களது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
உணவே மருந்து
உணவே மருந்து என நம் முன்னோர்கள் கூறியதுபோல இத்தகைய உணவுகளை நாம் அன்றாடம் பயன்படுத்திவரும்பட்சத்தில் நம்மை எந்த நோயும் அண்டாது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தினை அரிசிகளைச் சாப்பிட்ட நம் முன்னோருக்கு நெல் அரிசி சோறு சாப்பிடுவது என்பது கனவாக இருந்தது. நெல் அரிசி எளிதில் கிடைப்பது இல்லை.
ஆனால், தற்போது எங்குச் சென்றாலும் அரிசி சோறு கிடைத்தாலும், தினைகள் கிடைப்பது இல்லை. அதற்கான விலையும், மதிப்பும் தற்போது உயர்ந்துள்ளது என்பது நிதர்சனம்.
இதையும் படிங்க:உடலின் கெட்ட கொழுப்பை குறைக்கும் வால்நட்ஸ்