சென்னை:நாம் சாதாரணமாக நினைக்கும் சில பொருட்களில் அதிக சக்தி இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை தான். தேங்காயில் பல நன்மைகள் உள்ளன என்று நாம் அறிவோம். அதேபோல் நாம் தூக்கி எறியும் தேங்காய் நாரிலும் பல வகையான நன்மைகள் இருக்கின்றன.
மூட்டுவலிக்கு நிவாரணம்: தேங்காய் நார் வலி நிவாரணியாக செயல்படுகிறது என கூறப்படுகிறது. கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேங்காய் நார் சிறந்த மருந்தாக செயல்படுவதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். மூட்டுவலியால் பாதிக்கப்படுபவர்கள் தேங்காய் நாரைக் கொண்டு டீ (Tea) தயாரித்துக் குடிக்கலாம். தேங்காய் நாரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டுவலியைக் குறைக்க உதவுகின்றன.
முத்துப் போன்ற பற்களுக்கு: தேங்காய் நார் பற்களை பிரகாசமாக்கவும் பயன்படுகிறது. சிலரது பற்கள் மஞ்சள் நிறத்தில் கறை படிந்து காணப்படும். அவர்கள் தேங்காய் நாரைப் பயன்படுத்தி, வெண்மையாக பற்களைப் பெறலாம். ஒரு பாத்திரத்தில் தேங்காய் நாரைச் சேர்த்து, மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். தேங்காய் நாரை கருப்பாக மாறிய பிறகு, அதனை உலத்த வேண்டும். அதில் கிடைத்தப் பொடியைக் கொண்டு தினமும் பற்களை சுத்தம் செய்தால், பற்கள் வெண்மையாக பிரகாசமாக இருக்கும்.
வயிற்றுப்போக்கை சரிசெய்யும்: தேங்காய் நார் செரிமான பிரச்சினைகளுக்கும், வயிற்றுப்போக்கு பிரச்சினைக்கும் சிறந்த தீர்வாக உள்ளது. உங்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சினை ஏற்படும் போது, தேங்காய் நார் தண்ணீரை குடித்தால் அதிலிருந்து நிவாரணம் பெறலாம். தேங்காய் நாரை நன்றாக சுத்தம் செய்து, அதனுடன் தண்ணீர் சேர்த்து, சூடாக்க வேண்டும். அதன் பிறகு அதை வடிகட்டி வெதுவெதுப்பாக குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு உடனடியாக சரியாகி விடும்.
கொசுக்களை விரட்ட: தற்போது கொசுத்தொல்லை பெரிய பிரச்சினையாக உள்ளது. கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்தினால் சுவாசப்பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தவிர்க்க தேங்காய் நாரை வைத்து கொசுக்களை விரட்டலாம். அதற்கு ஒரு பித்தளை பாத்திரம் தேவை. பாத்திரத்தில், தேங்காய் நார் மற்றும் சிறிது கற்பூரம் சேர்த்து, எரித்தால் அதில் இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டுவதுடன், வீட்டில் உள்ள துர்நாற்றத்தையும் அகற்றும்.
பாத்திரங்களை கழுவ: முன்பெல்லாம், சமையல் பாத்திரங்களை கழுவுவதற்கு ஸ்க்ரப்பர்கள் கிடையாது. அதனால் மக்கள் தேங்காய் நாரையே ஸ்க்ரப்பராக பயன்படுத்தினர். ஆனால் தற்போது உடலுக்கு குந்தகம் விளைவிக்கும், பிளாஸ்டிக், ஸ்பாஞ்ச் உள்ளிட்ட பல்வேறு செயற்கை ஸ்க்ரப்பர்களைதான் பயன்படுத்துகின்றனர். அதற்கு பதிலாக மீண்டும் பழையபடி தேங்காய் நார்களை பயன்படுத்தலாம். சாம்பல், எலுமிச்சை சாறு போன்றவற்றை பயன்படுத்தி, தேங்காய் நாரைக் கொண்டு பாத்திரம் கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பது மட்டும் இன்றி, பாத்திரத்தில் இருக்கும் கிருமிகள் முழுமையாக அகற்றப்படும்.
இதையும் படிங்க:மரம் போடும் முட்டை: சைவ முட்டை பழத்தின் அசாத்திய பலன்கள்.!