ஒரு கருவை 40 வாரங்கள் தனக்குள் பொதிந்து, அதை பூமிக்கு உயிராகக் கொடுக்கும் பெண் உண்மையில் எத்தனை அற்புதமானவள். இந்தியாவில் ஒரு பெண் பூப்படைவதும், கருவுறுவதும் அவளுக்கானப் பொறுப்புக்களை அதிகரிக்கின்றன. குறிப்பாக,பிரசவித்த பெண்ணிற்கு அறிவுரைகள் சொல்ல ஒரு ஊரே திரண்டு வரும். இந்த அறிவுரைகள் உண்மையாகவே அவளுக்கானதா? இதனால் அவளுடைய மனம் மகிழ்ச்சியடைகிறதா? எனக் கேட்டால் 99.9 விழுக்காடு ’இல்லை’ என்ற பதில்தான் வரும்.
ஆனால் அவளுக்கு அந்த கருவுற்ற காலமும், பிரசவிக்கும் காலமும் முற்றிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில், குடும்பத்தின் ஆதரவும் தேவை. அவள் தனிப்பட்டவள் அல்ல. தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு என்ன தேவையிருக்கிறது, பிரசவித்த பெண்ணின் குடும்பத்தினர் என்னென்ன செய்ய வேண்டும் என மகப்பேறு ஆலோசகர் டீனா அபிஷேக்கிடம் கேட்டோம்.
மன அழுத்தம் தாய்ப்பால் சுரப்பைக் குறைக்குமா?
நிச்சயமாக வாய்ப்பிருக்கிறது. ஒரு பிரசவித்த பெண்ணிற்கு தாய்ப்பால் சுரப்பதில் உணவின் பங்கைவிட ஹார்மோன்களின் பங்குதான் அதிகம். மூளையின் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் புரோலக்டின் மற்றும் ஆக்சிடோடின் (prolactin and oxytocin) ஆகிய இருஹார்மோன்களும் தாய்ப்பால் சுரப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. ஹப்பி ஹார்மோனான ஆக்சிடோசின், புரோலக்டின் ஆகிய இரண்டும் அதிகமாக சுரக்கும்போது பால் சுரப்பும் அதிகமாகும். இதற்கு பெண்களின் மனநிலை மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அதே சமயம் கால்சியம், இரும்புச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்கள் உணவில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
பிரசவித்த பெண்ணின் குடும்பத்தார் கவனத்திற்கு...
பெண்களின் மனநிலையில் குடும்பத்தார் முக்கிய பங்காற்றுகின்றனர். குழந்தைக்கு பால் கொடுப்பது தாயின் வேலை, கடமை என குடும்பத்தார் விலகி நிற்காமல், அந்த பெண்ணிற்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவது அவசியம். சில பெண்களுக்கு குழந்தையின் வாயை மார்பகத்தில் வைப்பதில் சிக்கல் இருக்கலாம். ஆகவே குடும்பத்தார் பிரசவித்தப் பெண்களுக்கு Latching முறையைக் கற்றுக்கொடுக்கலாம். முறையாக தெரிந்து கொள்ள ஆலோசகரைத் தொடர்பு கொள்ளலாம். இதனால், தாய், சேய் இருவருக்குமே தன்னிறைவு ஏற்படுகிறது.
குறிப்பாக, ஒவ்வொரு பெண்ணும் குழந்தைப்பேறு அடைந்து அக்குழந்தையைப் பெற்று வளர்ப்பது வெவ்வேறு வகையான பயணமே தவிர, ஒரே மாதிரியானதல்ல. அதனால் பிற தாய்மார்களோடு பிரசவித்த பெண் தன்னை ஒப்பிடுவதோ அல்லது அந்த பெண்ணின் குடும்பத்தார் ஒப்பிட்டு பேசுவதோ சரியான அணுகுமுறையல்ல. இதுவும் மன அழுத்தைக் கொடுக்க வாய்ப்புள்ளது.
‘ஹே நீ குழந்தையை நல்லா பாத்துக்குற’ என தாயிடம் சொல்லிப் பாருங்கள், எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் அந்த குழந்தைக்கு பாலூட்ட அத்தாய் தயாராகிவிடுவாள். இந்த வார்த்தைக்குள் அவ்வளவு தன்னம்பிக்கையளிக்கும் மந்திரத்தன்மை ஒளிந்திருக்கிறது.
குழந்தையின் சின்னசின்ன அசைவுக்கும் தாயை பழி சொன்னால் தாயின் எதிர்காலம் மட்டுமல்ல, கூடவே சேயின் எதிர்காலமும் பாதிக்கும் என்பதை குடும்பத்தார் புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தை பிறந்த முதல் பத்து நாள்களில் ஏற்படும் எடையிழப்புக்கு தாய்ப்பால் பற்றாக்குறைதான் காரணமா?
இப்படிச் சொல்வது வெறும் கட்டுக்கதைதான். இதில் தாயைக் குறை சொல்லவேண்டிய அவசியமே இல்லை. கருப்பையில் குழந்தையைச் சூழ்ந்திருக்கும் ஆம்னியாடிக் திரவத்தை குழந்தைகள் அருந்திக் கொண்டேயிருப்பதால், அவர்களின் உடலில் நிறைய தண்ணீர் இருக்கும். இந்நிலையில் தாயின் பிரசவத்தில் வெளிவரும் குழந்தை முதல் 10 நாள்களில் இத்திரவத்தை இழப்பார்கள். இந்நேரத்தில் குழந்தையின் தேவைக்கேற்ப ஒவ்வொரு இரண்டு மணிக்கூறுகளுக்கு ஒருமுறையும் தாய்ப்பால் கொடுக்கவேண்டும். இந்த திரவ இழப்பால் குழந்தையின் சற்று எடை இழக்க நேரிடும். இது இயல்புதான்.