சென்னை:குளிர் காலம் வந்துவிட்டது.. பனிப் பொழிவு காரணமாகச் சரும வறட்சி ஏற்பட்டுத் தோல் உறிதல், உதடு வெடித்து இரத்தம் வருதல், கை மற்றும் கால்கள் என அனைத்து பகுதிகளும் வறட்சி அடைந்து அரிப்பு ஏற்படுதல். இது சாதாரன பிரச்சனையாகத் தோன்றலாம். ஆனால், இது பலருக்கு பெரும் தொல்லையாகவே இருக்கும். இந்த வறட்சியைப் போக்கப் பலவிதமான முயற்சிகளை முன்னெடுப்பார்கள். அந்த வகையில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாங்கள் சிறிய வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறோம். இதை முறையாகக் கடைப் பிடியுங்கள்... சரும வறட்சி பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள்.
குளிர்காலத்தில் என்ன நடக்கும்:குளிர் காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் பனிப் பொழிவு காரணமாக, சருமத்தில் உள்ள எண்ணெய் பசை தானாக அகற்றப்படும். மேலும், குளிரைச் சமாளிக்க உடல் தானாகவே சூட்டைக் கிளப்பும், அதே நேரம் குளிர்ச்சி நிலவுவதால் தண்ணீர் குடிப்பதற்கான எண்ணமும் தோன்றாது. இதனால் உடலில் நீர்ச் சத்து குறையும். இதன் காரணமாகவே சரும வறட்சி ஏற்படுகிறது.
இதற்கு என்ன செய்யலாம் என பார்க்கலாம்:
- நீரிழப்பு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்:வெயில் காலத்தை போலவே குளிர்காலத்திலும் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலத்தில் தாகம் இருக்கும். தண்ணீர் குடிப்போம். ஆனால் குளிர்காலத்தில் தண்ணீர் தாகம் இருக்காது. ஆகையால் சரியாக தண்ணீர் குடிக்க மாட்டோம். இதனால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு சருமம் வறண்டு போய்விடும். ஆகவே குளிர்காலத்திலும் 8 முதல் 10 டம்ளர் அளவிலான நீரை அருந்த வேண்டும்.
- மாய்ஸ்சரைசர் பயன்பாடு: குளித்து விட்டு வந்தவுடன் சருமம் திட்டுதிட்டாக மிகவும் வறண்டு காணப்படும். இதனால் குளித்து விட்டு வந்தவுடன் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும். மாய்ஸ்சரைசர் பயன்படுத்தும் போது முகத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் கை, கால்களிலும் பயன்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரை (Water Based Moisturizer) உபயோகப்படுத்தாமல், எண்ணெய் சார்ந்த மாய்ஸ்சரைசரை (Oil Based Moisturizer) பயன்படுத்த வேண்டும்.
- சல்பேட் இல்லாத பேஷ் வாஸ்: பொதுவாக நாம் முகத்தை கழுவுவதற்கு பயன்படுத்தும் பேஷ் வாஸ், க்ளன்சர் போன்றவற்றில் நுரை வருவதற்காக சல்பேட் சேர்க்கப்பட்டிருக்கும். சல்பேட் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களை உபயோகப்படுத்தும் போது, அவை சருமத்தை மேலும் வறட்சியாக்கும். ஆகவே சல்பேட் இல்லாத பேஷ் வாஸ்களை பயன்படுத்த வேண்டும்.
- சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும்:பலர் கோடை காலத்தில் தான் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவர். குளிர்காலத்தில் பயன்படுத்த மாட்டார்கள். அவ்வாறு செய்வது தவறு. குளிர்காலத்திலும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். குளிர்காலத்திலும் சூரியனின் தாக்கம் இருக்கும்.
- நீர்ச்சத்துள்ள பழங்களை உண்ண வேண்டும்:குளிர்காலத்திலும் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும். குறிப்பாக நீர்ச்சத்துள்ள வெள்ளரி, ஆரஞ்சு, பிரக்கோலி, தர்பூசணி, அன்னாசி போன்றவற்றை உண்ண வேண்டும்.
இதையும் படிங்க:பச்சிளம் குழந்தைகளின் சருமத்திலும் ஏற்படும் வறட்சி.. என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?