தாய் தந்தை இருவருமே வேலைக்குச் செல்லும் காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான காரியமாக உள்ளது. ஆனால் பொறுமை, ஒற்றுமையுடன் செயல்பட்டால், குழந்தைகளை நல்ல பழக்கங்களை சொல்லிக்கொடுத்து வளர்க்க முடியும்.
முந்தைய காலத்தில் கூட்டுக் குடும்பங்களில் குழந்தைகள் பிறக்கும்போது, அவர்கள் தாய், தந்தை பராமரிப்பு மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பிலும் வளருவார்கள். தற்போது சிறு குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளை தற்போதைய காலத்தில் இருக்கும் பெற்றோர் வளர்க்க மிகவும் சிரமப்படுகின்றனர். குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை சொல்லிக்கொடுக்க கடினப்படுகின்றனர்.
குழந்தைகள் பெற்றோர் சொல்லிக் கொடுக்கும் விஷயங்களுக்கு மாறாக பெற்றோரை பார்த்து அதன்படி நடக்கிறார்கள் என மூத்த மனநல மருத்துவர் வீணா கிருஷ்ணன் கூறுகிறார். இந்தச் சூழ்நிலையில் குழந்தைகள் முன் பெற்றோர் பாசிட்டிவாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்கிறார். அப்போதுதான் குழந்தைகள் நல்ல குழந்தைப்பருவத்தை அனுபவிப்பார்கள்.
இன்னும் பல வழிகளில் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை கற்றுக்கொடுக்கலாம். அதற்கான சில டிப்ஸ்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
1. பெற்றோர் வீட்டின் சூழ்நிலையை எப்போதும் பாசிட்டிவாகவும், இனிமையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆரோக்கியமான சூழலில் குழந்தை மகிழ்ச்சி, மரியாதை, பாதுகாப்பாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
2. குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவிடுங்கள். அவர்களுடன் பேசுங்கள், அதைவிட முக்கியமாக அவர்கள் கூறுவதை கவனமுடன் கேளுங்கள். இது பெற்றோருக்கும் குழந்தைக்குமிடையிலான பந்தத்தையும், உறவையும் வலுப்படுத்தும்.
3. உங்கள் குழந்தைகளின் நல்ல, நேர்மறையான நடத்தையை கவனத்தில் கொண்டு அவ்வப்போது பாராட்டுங்கள். குழந்தை ஏதாவது தவறு செய்துவிட்டு அதற்காக நீங்கள் கண்டித்தீர்கள் என்றால் மீண்டும் அந்தத் தவறை குழந்தை செய்யும் வாய்ப்பு உள்ளது. குழந்தையை திட்டுவதற்கு பதிலாக அவர்களது நல்லது, கெட்டது எது என விளக்குங்கள்.
எனினும் திட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குழந்தையை கண்டிப்பதை தவிர வேறு வழியில்லை. இதுபோன்ற சூழலில் குழந்தையை தகாத வார்த்தை கொண்டு பேசுவதோ, அடிப்பதோ தவிர்க்கப்பட வேண்டும்.
4. பகிர்ந்துகொள்ளும் பழக்கம் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு அவசியமாகக் கற்பிக்கப்பட வேண்டும். பள்ளிக்கு எடுத்துச் செல்லும் சிற்றுண்டி, கற்கும் பொருள்கள், புத்தகங்கள் என அனைத்திலும் பகிர்தலை கற்றுக்கொடுங்கள். இது அவர்களின் ஆளுமைத்தன்மையில் அவர்களை சிறந்து விளங்கச் செய்யும்.