தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 3, 2020, 3:00 PM IST

ETV Bharat / state

சுட்டெரிக்கும் வெயில்... தவிக்கும் சங்குவளை நாரைகள்: பாலைவனமான பறவைகள் உய்விடம்!

விருதுநகர்: வறட்சி மாவட்டத்தில், தவிக்கும் நீர்ப்பறவையான சங்குவளை நாரைகளை, விரைந்து பாதுகாப்பதே மானுட அறம்.

சங்குவளை நாரைகள்
சங்குவளை நாரைகள்

பருவநிலை மாற்றம் காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ளும் இடம்பெயர்வு ’வலசை போதல்’ என அழைக்கப்படுகிறது. உலகமே, ஊரடங்கினால், முடங்கிக் கிடந்தாலும், பறவைகள் வலசைபோவதை மறக்கவில்லை.

ஊரடங்கு மனிதர்களுக்கு வேலியானாலும், பிற உயிரினங்களுக்கு ஜாலியாகத்தான் தெரிகிறது. வயல்வெளிகள், சாலைகள், ஊர் எல்லைகள் என அனைத்து இடங்களிலும் அவை சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றன.

விருதுநகர் மாவட்டம், சங்கரபாண்டியபுரம் பகுதியில், இனப்பெருக்கத்திற்காகக் குவிந்த சங்குவளை நாரைகள், சாரைசாரையாய் சுற்றித்திரிவது காண்போரை ஈர்க்கிறது.

சங்குவளை நாரைகள்

சங்கு வளை நாரைகள்

சிகோனிடே' (Ciconiidae) குடும்பத்தைச் சேர்ந்த நீர்ப்பறவை. சங்குவளை நாரைகள் மைக்டீரியா லுகோசெபலா இனத்தைச் சேர்ந்தவை. சதுப்பு நிலம், நீர்நிலை அருகில் உள்ள திறந்தவெளிப் பகுதிகளில் காணப்படும்.

நீளமான, மஞ்சள் நிற அலகைக் கொண்டிருப்பதால் மஞ்சள் மூக்கு நாரை எனவும், இதனை அழைப்பார்கள். கூட்டம் கூட்டமாக இரை தேடும் பழக்கம் கொண்டவை. இந்தியத் துணைக்கண்ட பகுதிகளிலும், தென் இமயமலைப் பகுதிகளிலும் காணப்படும். இந்தப் பறவைகள், நண்டு, மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களைத்தான் உணவாக எடுத்துக் கொள்ளும்.

சங்குவளை நாரை

இந்நிலையில், தகிக்கும் வெப்பத்தில் உழன்றுகொண்டிருக்கும் வறட்சி மாவட்டமான விருதுநகரில், இப்பறவைகள் உணவின்றியும், நீரின்றியும் சிரமப்பட்டுவருகின்றன.

காய்ந்த கண்மாயில், பசியோடு நடக்கும் பறவைகள், மனதை வேதனையில் உறையச் செய்கிறன்றன. ஆனால், வனத் துறையோ, வெறுமனே, இது பறவைகளின் உய்விடம் என்று மட்டும், அறிவிப்புப் பலகையை வைத்துவிட்டு மறந்துவிட்டது.

இங்குவரும் பறவைகளின் பராமரிப்பிற்கென எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. அதனால், பறவைகள் வாழ ஏற்றதுபோலயில்லாமல், வறண்ட பூமியாகக் காட்சியளிக்கிறது, பறவைகள் உய்விடம்.

சுட்டெரிக்கும் வெயில்... தவிக்கும் சங்குவளை நாரைகள்: வனத் துறை நடவடிக்கை எடுக்குமா?

இது குறித்து பறவைகள் ஆர்வலர் விஜயகுமார் கூறும்போது, "இங்குவரும் பறவைகள் மட்டுமில்லை, விலங்குகளும் தண்ணீரின்றி தவித்துவருகின்றன. மாவட்ட நிர்வாகமோ, வனத் துறையோ இது குறித்து அக்கறை காட்டவில்லை.

விரைந்து இப்பறவைகளுக்கும், வனவிலங்களுக்கும் போதுமான பாதுகாப்பு ஏற்படுத்தி, தண்ணீர் தொட்டிகள், குட்டைகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கு மாவட்ட வனத் துறை பொறுப்பெடுக்க வேண்டும்" என்றார்.

மனிதர்களைப் போல, இயற்கை, பாரபட்சத்தோடு உயிரினங்களை நடத்துவதில்லை. அனைத்து உயிரினங்களுக்கும் தனிமதிப்பளித்து அரவணைக்கிறது.

அந்த வகையில், உணவுச் சங்கிலியில் பிணைந்திருக்கும் சங்குவளை நாரைகள், தண்ணீரும், உணவும் இல்லாமல் தவிப்பது, ஒட்டுமொத்த மனித இனத்தையும்தான் பாதிக்கும். இதனைப் புரிந்துகொண்டு, மாவட்ட நிர்வாகமும், வனத் துறையும் விரைந்து சென்று, சங்குவளை நாரைகளைக் காக்க வேண்டும்.

இதையும் படிங்க: என் கிராம மக்களின் நலனுக்காக செய்தேன்....கொலுசை விற்று கபசுரக் குடிநீர் வழங்கிய இளம்பெண்!

ABOUT THE AUTHOR

...view details