நாடு முழுவதும் கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நாட்டு மக்கள் பலர் நான்கு சுவர்களுக்குள்ளேயே முடங்கியுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஊரடங்கினைப் பயனுள்ளதாக மாற்ற முற்பட்டுள்ளனர்.
ரோசல்பட்டி கிராமத்தில் முத்தால்நகரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஊற்றெடுத்து மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய கிணறு ஒன்றினை பின்நாளில் அப்பகுதி மக்கள் குப்பைகளைக் கொட்ட பயன்படுத்திவந்துள்ளனர்.
இப்பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதால் கிணறு மிகவும் வறண்டிருந்ததாகவும், அதனால் இனி கிணற்றைப் பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டதால் குப்பைக் கொட்டும் பகுதியாக மாற்றியதாகவும் அப்பகுதி மக்கள் விளக்கமளித்தனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என எண்ணிய இளைஞர்களும், மாணவர்களும் தூர்வார தீர்மானித்தனர்.