விருதுநகர்: சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி பகுதியில், பூமாரி என்பவருக்குச் சொந்தமான சோலை பட்டாசு தொழிற்சாலையில் நேற்று (ஜனவரி 5) வெடி விபத்து ஏற்பட்டது. இதில் எட்டு பேர் படுகாயமடைந்தனர். அதில் காயமடைந்தோர் சிலர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் சிலர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
விபத்தில் லேசாக காயமடைந்த பூமாரி, பெருமாள் ஆகிய இருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மேலும் கருப்பசாமி, செந்தில்குமார், காசி, அய்யம்மாள், முனிசாமி ஆகியோர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணம்
பூமாரி என்பவர் பெயரில் மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று பட்டாசு ஆலை செயல்பட்டுவந்துள்ளது. இந்தப் பட்டாசு ஆலையில் ஏழு அறைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. மேலும் இந்தப் பட்டாசு ஆலையில் உச்ச நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் என்று சொல்லக்கூடிய பச்சை உப்புவைப் பயன்படுத்தி சரவெடி, தரை சக்கரம், பொரிவானம், வாணவெடி உள்ளிட்ட பல வெடிகளைச் சட்டவிரோதமாகத் தயார்செய்துள்ளனர்.