விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோபால். இவரது மனைவி சந்திரா (60). இவர் சொந்த பணத் தேவைக்காக எரிச்சநத்தத்தில் உள்ள பாண்டியன் கிராம வங்கியில் கடந்த 3.9.2018 ஆம் தேதி 17 பவுன் தங்கநகைகளை ரூ 2.45 லட்சத்திற்கும், பின்னர் அதே நாளில் மீண்டும் 19 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ 1.30 லட்சமும் பெற்றுள்ளார்.
வங்கி ஆவணப்படி மொத்தம் ரூ.31 பவுன் தங்கநகை அடகு வைத்ததாக சந்திராவுக்கு வங்கி மூலம் ரசீது வழங்கப்பட்டது. கடந்த மாதம் 18ஆம் தேதி வங்கிக்குச் சென்ற அவர் நகைகளை மீட்க வந்ததாகக் கூறியுள்ளார். அதற்கு வங்கி மேலாளர் இன்று அதிக வேலை உள்ளதால் நகை அடகு வைத்த ரசீதுகளை கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார், அதன்படி சந்திரா ரசீதுகளைக் கொடுத்துவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இரண்டு நாள்கள் கழித்து வங்கிக்கு சென்ற மூதாட்டியிடம், அவர் கையெழுத்திட்டு நகைகளை மீட்டுச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்திராவே நகைகளை மீட்டதாகவ வங்கி அலுவலர்களும் தெரிவித்துள்ளனர்.