விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு கரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதன்படி, மாவட்டத்தில் இதுவரை 18 கரோனா சிகிச்சை மையங்களில் 927 நபர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே தனியார் பள்ளி மைதானத்தில் 200 நபர்கள் சிகிச்சை பெறும் வகையில் ஆக்சிஜன் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கரோனா சிகிச்சை மையத்தை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 19-ஆவது கரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் கே. கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் கண்ணன், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திறப்பு விழாவின் போது மாவட்ட ஆட்சியர் கண்ணனுடன் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், மக்களிடம் தடுப்பூசி செலுத்துவதில் உள்ள ஆர்வம் குறித்தும்,மாவட்டத்தில் கறுப்புப் பூஞ்சை பாதிப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகளை அரசு நெறிமுறைகளுக்கு உட்பட்டு குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறினார்.