விருதுநகர்:ராஜபாளையத்தில் கடந்த 12ஆம் தேதி தீபாவளி அன்று இனிப்பாக உரிமையாளர் சிவகுமார் தனது குடும்பத்துடன் வரும்போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பந்தமாக தெற்கு காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், காவல்துறையின் தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவகுமாரின் மனைவி காளீஸ்வரி தனது ஆண் நண்பருடன் இணைந்து கொலை செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இனிப்பக உரிமையாளர் சிவக்குமார் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜா ஸ்வீட்ஸ் என்ற பெயரில் ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளார். மேலும், விஜயகுரு டிரஸ்ட் என்று ஒன்றையும் நிர்வகித்து வந்துள்ளார். சிவக்குமார்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் தனது கடையில் பணியாற்றி வந்த காளீஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், ராஜபாளையத்தில் உள்ள தனது ஸ்வீட் கடையைத் தற்காலிகமாக மூடிவிட்டு சென்னையில் தனது குடும்பத்துடன் சிவக்குமார் வசித்து வந்துள்ளார். தீபாவளிக்காகச் சொந்த ஊருக்குத் திரும்பிய சிவகுமார் தனக்குச் சொந்தமான விவசாய நிலங்களைப் பார்வையிடுவதற்காக தெற்கு வெங்காநல்லூர் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அவருக்குச் சொந்தமான இடத்தில் நால்வர் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்ததாகவும், அவர்களைத் தனது இடத்தை விட்டுப் போகச் சொல்லி சிவக்குமார் சத்தம் போட்டதாகவும் மீண்டும் அவ்வழியாக வந்த சிவக்குமாரை வழிமறித்து வாகனத்தைத் தள்ளிவிட்டு நால்வரும் தனது கணவரை வெட்டியதாக காளீஸ்வரி தனது வாக்குமூலத்தில் 12ஆம் தேதி தெரிவித்திருந்தார்.