விருதுநகர்மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (ஜூன்28) மாவட்ட அளவிலான பாதுகாப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் உச்சநீதிமன்றம் தனது 29.10.2021 என்ற தேதியிட்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளவாறு, பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசு உற்பத்தி ஆலைகளை தொடர் ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் இயங்கிவரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிகளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்ட இனங்களில் தொடர்புடைய பட்டாசு ஆலைகளின் படைக்கலச்சட்ட உரிமத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உரிமம் ரத்து: படைக்கலச்சட்ட உரிமங்கள் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்ட காரணத்தால், தொடர்ச்சியாக உற்பத்திப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாததால், ஆலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் படைக்கலச்சட்ட உரிமத்தின் மீதான தற்காலிக இடைநிறுத்த ஆணைகள் விலக்கி ஆணையிடப்பட்டுள்ளது.