விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளாக அரங்கில் ஆட்சியர் கண்ணன் முன்னிலையில், மத்திய அரசின் தொடர்பு அலுவலர் ஜெயா தலைமையில் முன்னேற விளையும் மாவட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அணைத்து துறை உயர் அலுவலர்களும் கலந்துகொண்டனர். இந்த ஆய்வில் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளான திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி ஆகிய பகுதிகளில் கல்வி, விவசாயம், உள்கட்டமைப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், இவை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயா கூறுகையில், இந்தியாவில் 117 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக கண்டறியப்பட்டு அங்கே விவசாயம், கல்வி, உள்கட்டமைப்பு, சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அவற்றிற்கு குறியீடும் வழங்கப்பட்டன. மேற்கண்டவற்றில் விருதுநகர் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு 3 கோடி ருபாய் ஊக்கத்தொகையும் பெற்று தற்போது திட்டவரைவை நிதி ஆயோக்கிடம் வழங்கி உள்ளது.