விருதுநகர்: சின்னமூப்பன் பட்டியில் 22 லட்சம் மதிப்பில் செயல்படுத்தபட்ட பணிகளை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர் எம்.பி பேசுகையில், “ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் கறுப்புப் பூஞ்சை தொற்றுக்கு மருந்து ஒதுக்குவதிலும் கரோனா தடுப்பூசிகள் வழங்குவதிலும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு முகமும் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியான திமுக ஆட்சி காரணமாக பாராமுகம் காட்டுவதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும் கரோனா பெருந்தொற்று காலத்தில் பாஜக அரசு அரசியல் செய்வதாகவும் இது கண்டிக்கதக்கது” என மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டினார்.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வழங்குவதுபோல் அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் எனக் கூறிய மாணிக்கம் தாகூர், பெட்ரோல் விலை கடந்த ஒரு மாதத்தில் 23 தடவை விலையை உயர்த்தி இருப்பதாக தெரிவித்தார்.
அதேசமயம் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது பெட்ரோல், டீசல் விலையில் 9 ரூபாய் வரியாக இருந்ததாகவும், தற்போது அது உயர்ந்து 34 ரூபாயாக உள்ளது. தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையை வாட் வரி மூலமே குறைக்க முடியும் எனவும் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசால் மட்டும் குறைக்க முடியும் என்றார்.
மேலும் பேசிய அவர், பட்டாசு ஆலை விரைவில் திறக்கப்படும் என நம்பிக்கை இருப்பதாகவும், மேலும் பட்டாசு ஆலையில் 50% பணியாளர்கள் கொண்டு பட்டாசு ஆலைகளை இயக்க முடியாது எனவும் முழுமையான பணியாளர்கள் கொண்டு ஆலையை இயக்க விரைவில் நல்ல முடிவு வரும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.