விருதுநகரில் பழைய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட இட நெருக்கடி மற்றும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை காரணமாக, புதியப் பேருந்து நிலையம் கட்ட 1989-இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது இருந்த மாவட்ட அலுவலர்கள் மக்களிடம் கருத்துகளைக் கேட்காமல், மக்கள் பயன்பாடு அதிகம் உள்ள பகுதி எது என்பதை ஆராயாமல் ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியில், புதிய பேருந்து நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்தனர்.
1992ஆம் ஆண்டு ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தைக் கட்டினார்கள். ஆனால், பேருந்து மட்டும் தான் வந்தது மக்கள் பேருந்து நிலையத்திற்கு வரவில்லை. காரணம், புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி, பழைய பேருந்து நிலையத்திற்கு அல்லது நகருக்குள் அனைத்து நேரங்களிலும் செல்ல பேருந்து வசதி இல்லை. குறிப்பாக, இரவு நேரங்களில் சாலையில் மின்விளக்கு வசதியின்மை போன்ற காரணங்களால் பொதுமக்களுக்கு பாதுகாப்போ கேள்விக்குறியாக இருந்தது.