விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பக தோப்பு பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துவருகிறது. அந்த அருவிக்கு ஏராளமானோர் குளிக்கச் செல்கின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கே.பி.எஸ். நகர் காலனி பகுதியிலிருந்து ஒரு இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் அருவியில் குளிக்கச் சென்றுகொண்டிருந்தனர். அதேபோல் எதிர் திசையில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் இருவர் வந்துகொண்டிருந்தனர். செண்பக தோப்பு பகுதி அருகே வந்தபோது இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.