கரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு அரசு, மக்களிடம் "வீட்டில் இரு, விலகி இரு, தனித்திரு" எனும் கோரிக்கையை வைத்துள்ளது. அரசுக்கு அது கடைமை! நமக்கு அது உயிர்! என நம்மில் பலரும் பாதுகாப்பாக வீட்டிலிருக்கிறோம். ஆனால், நம்மை பாதுகாக்க பலர் சாலைகளும், மருத்துவமனைகளிலும், சாக்கடைகளிலும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். புரியும்படி சொன்னால், இந்த ஊரடங்கு காலத்தில் உயிரைப் பணயம் வைத்து வேலையாக அல்ல! சேவையாக செய்து வருகின்றனர்.
அதில் குறிப்பாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மக்களின் உயிரைகாக்க 24 மணி நேரமும் ஓய்வின்றி உழைத்துவருவது மறுக்க முடியாத உண்மை. தற்போதைய சூழ்நிலையில் யாராவது சாலையில் மயங்கி விழுந்து விட்டால் கூட நம்மில் பலர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவராக? எண்ணி உதவ முன்வருவதில்லை. ஏன் தும்பினால் கூட தேச துரோகியைப் போல பார்ப்பவர்களும் உண்டு. ஆனால் எங்கு, எப்போது, யார் அழைத்தாலும் 108 ஆம்புலன்ஸ் அடுத்த சில நிமிடங்களில் வந்துவிடுகிறது.
ஆம்புலன்ஸ் சேவை அளப்பரியது என்பதை உணர்த்தும் விதமாகவும், ஒரு எடுத்துக்காட்டாகவும் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா மட்டுமின்றி, அதற்கு முன்னதாகவும் கடந்த ஒன்றரை ஆண்டில் சுமார் 10 ஆயிரத்து 700 கர்ப்பிணிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்கள் 14, அதி நவீன உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்கள் 2, பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ்கள் 2 என மொத்தம் 18 ஆம்புலன்ஸ்கள் சேவையில் உள்ளன.
அதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 2 ஆம்புலன்ஸ்கள் கூடுதலாக 24 மணிநேரமும் தயார் நிலையில் உள்ளன. 24 மணிநேரமும் உழைக்கும் ஆம்புலன்ஸ்களைப் போல் அவற்றை ஓட்டுவது எந்திரமல்ல மனிதன், சாதாரண சக மனிதன். அவர்களின் பணிக்கு தலைவணங்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. அப்படி தலைவணங்க ஒரு உண்மைக் கதை இருக்கிறது.
விருதுநகரில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ரவி பாண்டி, 9 வருடமாக ஆம்புலன்ஸ் ஓட்டுநராகயிருக்கும் அவர் எவ்வளவு உயிர்களை மீட்டிருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் சேவையில் கணக்குப்பார்ப்பதில்லை. ஆனால் கரோனாவிற்கு கணக்கு உண்டு இதுவரை 50க்கும் மேற்பட்ட கரோனா தொற்றுடையவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆரம்ப காலத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேலை! அது மட்டும்தான் என் மனதிலிருந்தது. ஆனால் போகப் போக என் மனதில் ஒரு உயிரை சரியான நேரத்தில் காப்பற்ற முடியாமல் போய்விடுமோ என்ற பயமும், நான் ஓட்டும் ஆம்புலன்ஸில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நபர் என் மீது கொண்ட நம்பிக்கையின் பொறுப்பும் நிறைந்துவிட்டது. அன்றிலிருந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியை நேசிக்கத் தொடங்கினேன்.
நாங்கள் வீட்டில் அதிக நேரம் செலவிட்டது கிடையாது, ஆனால் வீட்டிற்கு செல்லும் போது குழந்தைகளுக்கு காலம் ஒதுக்கி அவர்களுடன் இருப்போம். ஆனால் கரோனா காலத்தில் வீட்டிற்குச் சென்றாலும் குழந்தைகளின் அருகில் செல்ல முடியவில்லை. அவர்களின் பாதுகாப்பிற்காக விலகியிருக்கிறேன். எனது குடும்பத்தார் இந்த வேலை குறித்து ஆரம்பத்தில் அச்சம் கொண்டனர். ஆனால் நாளடைவில் புரிந்துகொண்டனர். மக்களை பாதுக்காக்கும் எங்களை அரசும் பாதுகாக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கியுள்ளது" எனத் தெரிவித்தார்.
அதையடுத்து விருதுநகர் ஆம்புலன்ஸ் பணியாளரான சண்முக கனி கூறுகையில், "தற்போதுள்ள கரோனா சூழ்நிலையில் கரோனா நோயாளிகளை மருத்துவமனையில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது என்னையும் கரோனா தொற்று நோயாளியை போல அனைவரும் பார்க்கின்றனர், பழகுகின்றனர். அது வருத்தமாக இருந்தாலும், அப்படி என்னை நடத்துபவர்களுக்காகத்தான் வேலை பார்க்கிறோம் என நினைக்கும் போது பெருமையாக உள்ளது என பூரிப்புடன் தெரிவித்தார். தெரியாதவர்களுக்கு உதவி செய்து அதன் பூரிப்பை சிலர் மட்டுமே அனுபவிக்கின்றனர்.
அதில் ஆம்புலஸ் ஓட்டுநர்கள் நீங்க இடம் பெற்றுவிட்டனர். அப்படி உயிர்காக்கும் உன்னத சேவையை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆற்றிவருகின்றனர். கர்ப்பிணிகள் குழந்தைகளை சுமந்து உலகின் உயர்ந்த பாதுகாப்பை குழந்தைகளுக்கு அளிக்க எண்ணுகின்றனர். ஆனால் குழந்தையுடம் தாயையும் பாதுகாக்கின்றனர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்.
விபத்தில் சிக்கி துடிப்பவருக்கும், இதயம் துடிக்க காத்துக்கொண்டிருப்பவருக்கும் பணியற்றி, காப்பாற்றியவர்களின் நன்றியை கேட்க கூட நேரமில்லாமல் அடுத்த உயிரைக் காக்க செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் சேவை சொல்லி மாளாது. ஆபத்துக் காலங்களில் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் அவர்களை போற்ற வேண்டியது அனைவரின் கடமை.
இதையும் படிங்க:அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவை தொடக்கம்!