தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த உழைப்பில் உன்னதம்! நீர்நிலைகளை தூர்வாரிய கிராம மக்கள்! 40 ஆண்டுகால கனவு சாத்தியமானது எப்படி? - today latest news

villagers restored water bodies after 40 years: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி இருந்த கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளை தாங்களே முன்னின்று சீரமைத்து சாதனை புரிந்துள்ளனர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராம பொது மக்கள்.

villagers restored water bodies after 40 years
40 ஆண்டுகளுக்குப் பிறகு, சொந்த பங்களிப்போடு நீர்நிலைகளை சீரமைத்த கிராம மக்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 2:20 PM IST

40 ஆண்டுகளுக்குப் பிறகு, சொந்த பங்களிப்போடு நீர்நிலைகளை சீரமைத்த கிராம மக்கள்

விருதுநகர்: ஐ.நா.வின் ஆயிரமாண்டு வளர்ச்சி இலக்குகளில் வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நீர்நிலைகள் சீரமைப்பு முக்கியமானதாக உள்ளது. பசி, பட்டினியுடன் உலக மக்கள் எவரும் இருக்கக்கூடாது என்பதும் இந்த வளர்ச்சி இலக்கின் முதன்மையாகும். இந்த சூழலை உருவாக்குவதற்கான பல்வேறு முன் முயற்சிகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் நிலையில், வளரும் நாடான இந்தியாவிலும் மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட பிரதான் (Pradan) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு நீர்நிலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அப்பகுதியிலுள்ள கோவிந்த நல்லூர், அரசப்பட்டி, வெள்ளப்பொட்டல், நக்கமங்கலம், ஈஞ்சார், வேண்டுராயபுரம், வடபட்டி, காளையார் குறிச்சி, ருத்ரப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கண்மாய், குளம், கால்வாய் சீரமைப்புப் பணிகளில் உள்ளூர் மக்களின் பங்களிப்போடு ஈடுபட்டு வருகிறது.

இது குறித்து கோவிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் மற்றும் பஞ்சவர்ணம் ஆகியோர் கூறுகையில், "முட்புதர் மண்டிக்கிடந்த எங்கள் ஊர் கண்மாயை சுத்தம் செய்து, ஆழப்படுத்தி, கரையை உயர்த்தியுள்ளோம். மக்கள் பங்குத்தொகை செலுத்தி இதனைச் செய்துள்ளோம். கண்மாய் கலிங்கில் சீரமைப்புப்பணிகள் மேற்கொள்ள தற்போது உதவி கேட்டுள்ளோம்.

ஒவ்வொரு தடவை மழை பெய்யும்போதெல்லாம் கண்மாய் உடைந்துவிடுமோ என்ற அச்சத்துடன் இரவெல்லாம் தூங்காமலே இருப்போம். சாக்குகளில் மணல் அள்ளிச் சென்று கரைகளை அடைப்போம். கரை பலப்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது அந்த அச்சமெல்லாம் இல்லை. ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு ஏதுவான நிலை உள்ளது" என்றனர்.

அதே ஊரைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் செல்லக்கண்ணு மற்றும் கண்மாய்ச் சங்க நிர்வாகி முருகன் ஆகியோர் கூறுகையில், "எங்கள் ஊரில் 350 வீடுகள் உள்ளன. பெரும்பாலும் அனைவரும் விவசாயத்தை சார்ந்தே உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்பாக எங்கள் ஊர் பெரியகுளம் கண்மாய் உடைப்பெடுத்துவிட்டது. அப்போதிருந்தே அதனைச் சீரமைக்க முடியவில்லை. இதனால் தண்ணீரையும் தொடர்ந்து தேக்கி வைக்க முடியாத நிலை இருந்தது.

எங்களுக்கு அருகிலுள்ள கிராமங்களில் பிரதான் தொண்டு நிறுவனம் செய்து வரும் கண்மாய் மேம்பாட்டுப் பணிகளைக் கேள்விப்பட்டு, நாங்கள் அவர்களை கோவிந்தநல்லூருக்கு அழைப்பு விடுத்தோம். அவர்கள் நேரடியாக கண்மாய்க்கு வந்து ஆய்வு செய்து, எங்களை ஒருங்கிணைத்து கண்மாய்ச் சங்கம் அமைத்தனர்.

கண்மாய் சீரமைப்புச் செலவில் நான்கில் ஒரு பங்கை நாங்கள் செலுத்தினோம். மீதமுள்ள பணத்தை அவர்கள் செலுத்தி கண்மாய் வேலையை முடித்துக் கொடுத்தனர். தற்போது குடிதண்ணீர் பிரச்சனை மட்டுமன்றி, விவசாயத்திற்கான தேவையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஊரிலுள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது" என்றனர்.

கிராம மக்களின் தேவையை அறிந்து அவர்களை சங்கமாக ஒருங்கிணைத்து, அவர்களது பங்குப் பணத்தை அப்பகுதியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அவர்களது பெயரிலே செலுத்தி, பிறகு பிரதான் நிறுவனத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணத்தின் வாயிலாக நீர்நிலை சீரமைப்புப்பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்திற்கும் முறையான கணக்கு வழக்குகள் பேணப்படுகின்றன. பிரதான் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட பணியாளர் தொடர்ந்து இந்நீர்நிலைகளைப் பார்வையிட்டு, பணிகளை மேற்பார்வை செய்கிறார்.

வெள்ளப்பொட்டல் கிராமத்தின் ஊராட்சித் தலைவி தமிழ்ச்செல்வி மற்றும் நாட்டாமை தங்கக்குமார் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளாக கண்மாய் சீரமைக்கப்படாமல் இருந்தது. ஒருபோகம் கூட விளைவிக்க முடியாத நிலை. தண்ணீர் வந்தால் வெறும் 20 நாட்கள் மட்டும்தான் நிற்கும். 750 ஏக்கர் வரை பாசன நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் பிரதான் நிறுவனம் கிராம மக்களின் பங்களிப்போடு எங்கள் ஊர் கண்மாயைச் சீரமைத்துள்ளனர். இனி இருபோகம் விவசாயம் நாங்கள் மேற்கொள்ள முடியும்.

நெல், பருத்திதான் முக்கியப்பயிர். ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. மணிக்கு ரூ.100 அல்லது ரூ.150 கொடுத்துதான் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தோம். வெறும் 20 நாட்கள் மட்டுமே நிற்கின்ற தண்ணீரால், கிணறுகளில் நீர் மட்டம் உயராமல் போய்விடும். கண்மாய் பெருகுகின்ற காலங்களில் கரை உடையாமல் பாதுகாக்க கரையிலேயே வந்து படுத்துக் கிடப்போம். இப்போது நடைபெற்ற சீரமைப்புப் பணிகள் காரணமாக கண்மாய் கரை உயர்த்தப்பட்டு, கண்மாயும் ஆழப்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

இது குறித்து பிரதான் நிறுவனத்தின் திட்டத்தலைவர் முனைவர் சீனிவாசன் கூறுகையில், "வளரத்துடிக்கும் மாவட்டமாக விருதுநகர் திகழ்கிறது. நீர்நிலைகள் மேம்பாடு என்ற அடிப்படையில் விருதுநகர் மாவட்ட கிராமங்களில் பிரதான் நிறுவனம், இன்டஸ்இன்ட் (IndusInd) வங்கி நிதியுதவியுடன் 2022 முதல் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆண்டுக்கு ரூ.10 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 75 விழுக்காடு வேளாண்மை சார்ந்த குறிப்பாக நீர்நிலை மேம்பாடு சார்ந்து விருதுநகரில் மட்டும் வருகின்ற 2027-ஆம் ஆண்டு வரை இப்பணிகள் நடைபெறும். கடந்த 2022-ஆம் ஆண்டு மட்டும் 62 நீர்நிலைகளை குறிப்பாக நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, வத்திராயிருப்பு, விருதுநகர் மற்றும் சிவகாசி உள்ளிட்ட ஆறு ஒன்றியங்களில் சீரமைத்துள்ளோம். இந்த ஆண்டு சுமார் 90 நீர்நிலைகளை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் முடிவில் சுமார் 500 நீர்நிலைகள் புனரமைப்பு செய்யப்பட்டிருக்கும் என நம்புகிறோம்" என்றார்.

மேலும் பிரதான் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆதிநாராயணன் கூறுகையில், "இந்தப் பகுதியில் கண்மாய்கள் விவசாயத்திற்கு மட்டுமன்றி மேய்ச்சலுக்கும்கூட உயிர்நாடியாக உள்ளன. வத்ராயிரப்பு ஒன்றியத்தில் மட்டும் பிரதான் மற்றும் இன்டஸ்இன்ட் வங்கியின் முன்னோடி திட்டத்தில் கடந்த ஆண்டு 3 கண்மாய்கள் சோதனை அடிப்படையில் சீரமைக்கப்பட்டன. இந்த ஆண்டு 10 கண்மாய்கள் 5 குளங்கள் என மொத்தம் 15 நீர்நிலைகள் புனரமைப்பு செய்யப்பட உள்ளன. சுமார் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் இந்த ஒன்றியத்தில் மட்டும் பணிகள் நடைபெறவுள்ளன.

இப்பகுதியில் உள்ள கண்மாய்கள் அனைத்தும் பெரும்பாலும் 6 அல்லது 7 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை. எடுத்துக்காட்டாக கோவிந்தநல்லூரில் உள்ள பெரியகுளம் கண்மாய், அதற்கு மேலே உள்ள ஆயர்தர்மம் என்ற கண்மாயின் வடிகாலாக உள்ளது. அதுமட்டும் இன்றி மேற்குத் தொடர்ச்சி மலையில் பொழிகின்ற மழை நீரும் இந்தக் கண்மாய்க்கு வேறொரு வாய்க்கால் வழியாகவும் வந்தடைகிறது.

இக்கண்மாயின் நீர்ப்பிடிப்புப் பகுதி 76 ஹெக்டேர். பாசனப் பரப்பு 33 ஹெக்டேர், கூடுதலாக உள்ள 10 ஹெக்டேருடன் சுமார் 44 ஹெக்டேர் உள்ளது. இரண்டு மடைகள் உள்ளன. பெரிய மடையின் மூலமாக பாசனம் செய்து கொண்டிருந்தனர். தண்ணீர் பெருகும்போது கரை உடைப்பெடுக்கும் அவலம் கடந்த 40 ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது முழுவதுமாக அதனைச் சரி செய்து, கண்மாயை ஆழப்படுத்தியுள்ளோம்.

இனி வருங்காலங்களில் இவர்களது பாசனப்பரப்பு அதிகரிப்பதுடன், கண்மாயில் ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் தண்ணீர் இருப்பும் சாத்தியமாகும். இந்தக் கண்மாயைச் சீரமைக்க ஒத்துழைப்பு அளித்த விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணித்துறையினருக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க:உதகை மலை ரயிலுக்கு 116வது பிறந்த நாள்.. பாரம்பரிய நடனமாடி கொண்டாடிய தோடர் இன மக்கள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details