விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா பேராசிரியர்கள் அளித்த மன உளைச்சலால் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற நிகழ்வு சென்னை ஐஐடி மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் நடைபெறுகிறது.
அகில இந்திய அளவில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகளுக்கு எதிராக இழைக்கப்படும் துன்புறுத்தல்கள் குறித்து மத்திய அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பொறுப்புடன் செயல்பட்டு தற்கொலை செய்துகொண்ட பாத்திமா குடும்பத்திற்க்கு உரிய இழப்பீடு வழங்கியும், மாணவி தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறையே தவிர்க்க வேண்டும். இதனால் உயிர் பலி ஏற்பட்டு வருகிறது.
இது போன்ற உயிரிழப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நிறுத்திவைத்துள்ள தலித், பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவிதொகையை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும். பஞ்சமி நிலம் தொடர்பான ஆவணங்களை மு.க ஸ்டாலின் முன்பே வெளியிட்டுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக அதிமுக, பாமக கூட்டணியை சேர்ந்தவர்கள் காய் நகர்த்துகிறார்கள். முரசொலி தலைமையகம் அமைந்து உள்ள இடம் மட்டும் தான் பஞ்சமி நிலம் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கருதுகிறதா? தமிழ்நாடு முழுவதும் உள்ள 12.5 லட்சம் ஏக்கர் நிலங்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மீட்டு தருமா??? உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு ஏன் இவ்வளவு காலம் தள்ளிப் போட்டது ஏன்? என்பதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும் திமுக ஆட்சியில் இருந்து இருந்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அவர்கள் அச்சப்படுகிறார்கள் என கூறுவதில் அர்த்தம் இருக்கும். ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடுவது வரவேற்கத்தக்கவை. ஆனால் பால் பாக்கெட் பயன்படுத்திய பிறகு பாக்கெட் தூக்கி ஏறிப்படும். இதனால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. இதை தவிர்த்து பொதுமக்கள் தினசரி பார்க்கும் இடங்களில் திருக்குறளை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்றார்.
இதையும் படிங்க:’பாத்திமா தற்கொலை விசாரணையில் அரசியல் தலையீடு’ - திருமாவளவன்