விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கோகுலம் தங்கராஜை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
விருதுநகர் எம்ஜிஆர் சிலை ரவுண்டானா அருகே நடைபெற்ற பரப்புரையில் பேசிய அவர், "ஆட்சியில் உள்ள ஊழல் பெருச்சாளிகளுக்கு இந்தத் தேர்தலில் முடிவு கட்டுங்கள். பழனிசாமி, முதலமைச்சர் பதவியில் அமர்ந்து ஆட்சி செய்வதால் அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் ஆக முடியாது.
விருதுநகரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை எடப்பாடி பழனிசாமி பதவிக்காக எதையும் செய்யக்கூடியவர். இவரைப் போன்ற துரோகிகளுக்கு இந்தத் தேர்தலோடு முடிவுகட்ட வேண்டும். தொழிலாளர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படும், வீட்டில் ஒருவருக்காவது வேலைவாய்ப்பு வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். தேர்தல் அறிக்கையில் என்ன செய்ய முடியும் என்பதைத்தான் நாங்கள் கூறியிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் ஆறு லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும்போது இல்லத்தரசிகளுக்கு 1500 ரூபாய், இலவச சலவை இயந்திரம் எப்படி கொடுக்க முடியும். துரோகிகளின் ஆட்சியை இறக்கி ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அரங்கேற்றம் செய்ய குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள். விஞ்ஞான ஊழல் புரியும் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது உங்களின் கடமை" என்று தெரிவித்தார்.