அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவில்பட்டி பணிமனையைச் சேர்ந்தவர் ஓட்டுநர் கிருஷ்ணசாமி (40). இவருக்கும் சாத்தூர் பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் சொரூபராஜ் (40) என்பவருக்கும் இடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மதுரை செல்லும் பேருந்து நிலையத்தில் இருந்து யார் முதலில் பேருந்தினை எடுத்துச் செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலையில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்தினை எடுப்பதில் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஓட்டுநர் சொரூபராஜ், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக பேருந்து நிலையத்திற்கு வந்த காவல் துறையினர், ஓட்டுநர் கிருஷ்ணசாமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, காவல் நிலையத்தில் தன்னை காவல் துறையினர் தாக்கியதாக கிருஷ்ணசாமி, சக தொழிலாளர்களுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளை குறுக்கும் மறுக்குமாக நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பேருந்து நிலையத்துக்கு வெளியேயும் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாத்தூர் பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் சொரூபராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் காவல் துறையினரே அரசுப் பேருந்துகளை இயக்கி, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தினர்.
மேலும், கோவில்பட்டி, சாத்தூர் பணிமனை மேலாளர்கள் ரமேஷன், சுப்பிரமணியன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, ஓட்டுநர், நடத்துநர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசு பஸ்சை இயக்கிய போலீஸ்