சமூகத்தில் பல்வேறு இடங்களிலும் திருநங்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில் 65 வயது நிரம்பிய திருநங்கை ஒருவர் கிராம மக்களின் வற்புறுத்தலால் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
விருதுநகர் அருகே சின்ன பேராளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி என்ற அழகு பட்டாணி(65). திருநங்கையான இவர் சிறுவயது முதலே விவசாய கூலி தொழிலாளியாக வாழ்க்கையை நடத்திவருகிறார். இந்த வேலையின் மூலம் தனக்கு கிடைக்கும் பணத்தையும் பிறருக்காக உதவி செய்ய பயன்படுத்தும் குணமுடையவராக உள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை இவ்வாறு தன்னலமற்று இருக்கும் இவருடைய குணம் அறிந்த கிராம மக்கள் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு அழகு பட்டாணி போட்டியிட வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.
ஊர் மக்களின் வற்புறுத்தலின் பேரில் அழகு பட்டாணி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துள்ளார். பொது மக்களின் ஆதரவு உள்ளதால் வெற்றி நிச்சயம் என அவர் நம்பிக்கையுடன் உள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, மின்சாரம், குடிநீர், கழிவுநீர் பிரச்னை உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் அழகு பட்டாணி நிறைவேற்றித் தருவார் என கிராம மக்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர்.