விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், தரையில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவசை, பௌர்ணமியை தினங்களை முன்னிட்டு 8 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலில் குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் கூமாபட்டி கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான ராஜ்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் குடிநீருக்காக ரூ.5 வசூலிக்கப்படுவதன் நோக்கம் என்ன என்று மாவட்ட வனத்துறையிடம் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு வனத்துறை சார்பில் குடிநீருக்காக பக்தர்களிடம் பணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை என பதில் அளித்தனர். இது பக்தர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சதுரகிரியில் தண்ணீருக்கு பணம் வாங்குவதில்லை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பணம் வாங்கவில்லை எனக் கூறிவிட்டு, பக்தர்களிடம் வாங்கும் பணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.