தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரு சமுதாயத்தினருக்கிடையே மோதல்: பெண் தீக்குளிக்க முயற்சி!

விருதுநகர்: இரு சமுதாயத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக துலுக்கப்பட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thulukkupatti Village People Road Blocking Protest
Thulukkupatti Village People Road Blocking Protest

By

Published : Apr 30, 2021, 9:09 PM IST

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேண்டுராயபுரம் கிராமத்தின் வழியாக கூலி வேலைக்குச் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

சில நாள்களுக்கு முன்பு துலுக்கப்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் வேண்டுராயபுரம் வழியே பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

அப்போது, அவர்களை ஆடு, கோழி திருட வந்தவர்கள் என வேண்டுராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து துலுக்கப்பட்டி கிராம மக்கள் மல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்வதில் மெத்தனப் போக்கை காட்டி வந்ததாகத் தெரிகிறது.

இதற்கிடையே காவல் துறையினர் குற்றவாளிகள் சிலரை மட்டுமே கைது செய்தபட்சத்தில் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சில நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி துலுக்கப்பட்டி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிவகாசி - விளாம்பட்டி செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தபோது, பரமேஸ்வரி என்ற பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அதை கண்ட கீர்த்திகா என்ற பெண் காவலர் தடுக்கச் சென்ற போது அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இது தொடர்பாக துலுக்கப்பட்டி கிராம மக்கள் கூறுகையில், "வேண்டுராயபுர தைச்சார்ந்த மற்றொரு சமுதாய இளைஞர்கள் தங்கள் கிராம இளைஞர்களை தாக்கியதோடு, தங்கள் சமுதாயம் குறித்து தவறான தகவல்களை வாட்ஸ்அப் பில் பதிவிட்டுள்ளனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதோடு, தங்களது சமுதாயம் குறித்து தவறாக வாட்ஸ் அப்பில் பதிவிட்டவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தங்களது போராட்டம் மென்மேலும் தொடரும்" என தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக சிவகாசி - விளாம்பட்டி செல்லும் சாலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

ABOUT THE AUTHOR

...view details