விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். இவர் வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் பணி முடிந்து வழக்கம்போல் வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். அடுத்த நாள் காலை வீட்டின் அருகே நிறுத்தியிருந்த கார் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து துணை ஆய்வாளர் அன்புதாசன் தலைமையில் தனிப்படை அமைத்து, காவல் துறையினர் விசாரித்து வந்துள்ளனர். வீட்டின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், கார் காணாமல் போன தேதியன்று அதே பகுதியில் மற்றொரு கார் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிவந்தது கண்டறியப்பட்டது.
அந்தக் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையைத் துரிதப்படுத்திய காவல் துறையினர் காரை திருடிய நாகர்கோவிலைச் சேர்ந்த ஆஸ்டின் ஈபன் இன்பராஜ் (46), சுரேஷ்குமார் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மதுரையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், விசாரித்ததில் பழுதான வாகனங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றின் ஆர்சி புக் மட்டும் வைத்துக்கொண்டு வண்டியின் பாகங்களை இரும்பு கடையில் விற்று விடுவதாகவும், அதேபோன்ற மாடலில் உள்ள வாகனத்தை திருடி மேற்படி ஆர்.சி புக்கை பயன்படுத்தி விற்பனை செய்ததாகவும் மூவரும் வாக்குமூலம் அளித்தனர். அவர்களிடமிருந்து திருடுவதற்கு பயன்படுத்திய காரையும், திருடப்பட்ட கார்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.