விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டம்புதூரில் திமுக சார்பில் முப்பெரும் விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை வகித்தார்.
இந்த விழாவில் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதிய 4,041 கடிதங்கள் அடங்கிய 21,510 பக்கங்கள் கொண்ட நூலை 54 தொகுதிகளாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட அதனை துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.
அதே போல் முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய ‘திராவிட மாடல்’ என்ற புத்தகத்தை துரைமுருகன் வெளியிட அதன் முதல் பிரதியை டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து திமுகவின் மூத்த முன்னோடிகள் ஐந்து பேருக்கு கலைஞர் அறக்கட்டளை சார்பாக சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருது, கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருது, திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது, புதுவை சி.பி.திருநாவுக்கரசுக்கு பாவேந்தர் விருது மற்றும் குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருது ஆகியவை வழங்கப்பட்டன.
இவற்றுடன் ஒரு லட்சம் பணமுடிப்பும் நற்சான்றிதழ்களையும் முதலமைச்சர் வழங்கினார். அதேபோல் கட்சியில் சிறப்பாக பணியாற்றிய 16 நிர்வாகிகளுக்கு நற்சான்றிதழ்களும் ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.
பின்னர் முப்பெரும் விழாவில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும். இது கட்சியாக அல்ல குடும்பமாக நினைக்கக்கூடிய பல்கலைக்கழகம். நான் கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றுவதற்கு காரணமாக இருந்தது கட்சியின் இரு வர்ண கொடி.
இதற்கு நான் தலை வணங்குகிறேன்.மேலும் தமிழ்நாட்டை எல்லா வளமும் நலமும் கொண்ட மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். எம்ஜிஆர் காலத்தில் சத்துணவு வழங்கப்பட்டது, அண்ணா பிறந்த நாளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதை தொடங்கி வைத்துள்ளேன்.
இது மிகவும் பெருமையாக உள்ளது. திராவிட கழக தொண்டர்களுக்கு செப்டம்பர் 15 சிறந்த நாள். பெரியார், அண்ணா, கருணாநிதி, பாவேந்தர், பேராசிரியர் ஆகியோர் தத்துவத்தின் அடையாளங்கள். அதனால்தான் அவர்கள் பெயரில் விருதுகள் வழங்குகிறோம்.
தகுதி வாய்ந்த ஐந்து பெருமக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. கருணாநிதி எழுதிய கடிதம் 54 தொகுதிகளாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. இவை கடிதங்கள் இல்லை, காவியங்கள். 4,041 கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கருணாநிதியின் கடிதங்கள் திராவிட இயக்கத்தின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட மாடல் என்பது கட்சியின் ஆட்சி அல்ல. ஒரு இனத்தின் ஆட்சி. திராவிடம் என்பது ஒரு இனத்தின் பெயராக இருந்தது. இன்று அரசியல் பொருளாக உள்ளது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிரிப்பது ஆரிய மாடல். இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல்.
அனைத்துத்துறை வளர்ச்சி அனைவருக்குமான வளர்ச்சி என்பதை இந்த ஆட்சி அறிவித்திருக்கிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு உள்ளது. 251 பேருக்கு ஒரு மருத்துவர்கள் உள்ளார்கள். பட்டினி சாவு இல்லாத மாநிலம் தமிழ்நாடு. உங்களால் ஆனவன் நான்.
கட்சியையும் ஆட்சியையும் ஒரு சேர வழி நடத்தி வருகிறேன். இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளப்போவது திமுகதான். உங்கள் மீது நம்பிக்கை வைத்துதான் அதை சொல்கிறேன். கட்சி இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும். ராணுவ வீரர்களுக்கு நாட்டையும், வீட்டையும் காக்க வேண்டிய இரண்டு பொறுப்பு உள்ளது.
அதுபோல் நாமும் செயல்பட வேண்டும். அதிகாரம் பறிக்கப்பட்டால் மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. ஒற்றை மொழியான இந்தி திணிப்பை நாம் ஏற்க முடியாது. மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியால் நம்முடைய வரி உரிமை பறிக்கப்பட்டது.
அதேபோல் தமிழ்நாட்டில் ஆளுநரால் இரட்டை ஆட்சி நடத்த முயற்சி நடக்கிறது. இதைத் தடுக்க 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். ‘40ம் நமதே நாடும் நமதே’ என்ற முழக்கத்தின் தொடக்கமாக இந்த விழா அமைய வேண்டும்” என பேசினார்.
இதையும் படிங்க:அடுத்தவர் சாதனைக்கு, ஸ்டிக்கர் ஒட்டும் திமுக - அண்ணாமலை ஓபன் அட்டாக்