போக்சோவில் 10 ஆண்டுகள் சிறை - ஷாக்கில் அரளி விதையை தின்ற இளைஞர் விருதுநகர்:இராஜபாளையம் அருகே உள்ள வடக்கு தேவதானத்தைச் சேர்ந்த குமாரவேலு என்பவர் மகன் செல்வம்(26). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சேத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன் பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணஜெய ஆனந்த், குற்றவாளி செல்வத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, போலீசார் அவரை சிறையில் அடைக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது, குற்றவாளி செல்வம் தான் மறைத்து வைத்திருந்த அரளி விதையை யாரும் எதிர்பாராத நேரத்தில் விழுங்கினார். இதைப்பார்த்த போலீசார், சுதாரித்துக் கொண்டு, அவர் விழுங்கிய அரளி விதைகளை வெளியே துப்பச் செய்தனர்.
பின்பு, செல்வத்தை திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சையளித்து உள் நோயாளியாக அனுமதித்துள்ளனர். இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன், செல்வம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மாற்றுத்திறனாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி; 2 பெண்கள் உட்பட மூவர் கைது!