விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகர் பகுதியில் டிசம்பர் 4ஆம் தேதி காலை 4.30 மணிக்கு சார்பு ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் 6-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள பெருமாள் கோயில் வளாகத்தில் ஒருவர் போதையில் கிடந்துள்ளார். போதையில் இருந்தவரிடம் இரும்பு கம்பி, டார்ச் லைட் இருப்பதைக் கண்ட காவல் துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
பெருமாள் கோயிலில் புகுந்த திருடன் விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தத்தனேரி காலனி பகுதியைச் சேர்ந்த செந்தூர் என்ற செந்தூர்பாண்டி (55) கட்டட தொழில் செய்துவருவது தெரியவந்தது.
இவருக்கு கட்டட தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத கரணத்தால் திருட முடிவு செய்துள்ளார். வீடுகளுக்குச் சென்று கைவரிசை காட்டாமல், கோயில்களை நோட்டமிட்டு திருடி வந்துள்ளார். 2001ஆம் ஆண்டு முதல் திருடி வந்துள்ளதாக காவல் துறையிடம் தெரிவித்துள்ளார். திருட நினைக்கும் கோயிலில் பகலில் சென்று நோட்டமிட்டு, இரவில் புகுந்து பொருள்களையும், நகை, பணத்தையும் அள்ளிச் செல்வது இவரது வாடிக்கையாக இருந்துவந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புலிகுத்தி கிராமத்தில் உள்ள சிவன்கோயில் உண்டியல் திருடுபோனது. அந்தக் கொள்ளையில் செந்தூர்பாண்டிதான் ஈடுபட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் செந்தூர்பாண்டிக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்க ஆசை வந்துள்ளதாம். இதனால், ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ள கோயில்களை நோட்டமிட்டுள்ளார்.
பெருமாள் கோயிலில் இரவில் புகுந்து திருட திட்டமிட்டவர், கோயில் வளாகத்திலேயே போதையில் உறங்கிவிட்டதால், ரோந்து சென்ற காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வச்சக்காரப்பட்டி காவல் துறையினர், செந்தூர்பாண்டியை கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: 'பயங்கர ஆயுதங்களுடன் உலாவரும் சந்தனமர கடத்தல் கும்பல்' - சிசிடிவி காட்சி வெளியீடு!