விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு மிக அருகிலேயே தாலுகா காவல் நிலையம் , டிஎஸ்பி அலுவலகம், காவலர் குடியிருப்பு ஆகியவை உள்ளன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி பெரிய கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை என்று அறிவித்தது. இதனால் பெரிய மாரியம்மன் கோயிலுக்கு தினமும் அர்ச்சகர்கள் மட்டும் சென்று பூஜை செய்வது வழக்கம்.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் உண்டியல் ஒன்றை கடந்த 8ஆம் தேதி நள்ளிரவில் கொள்ளையர்கள் தூக்கிச் சென்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருவர் முகமூடி அணிந்து திருடி செல்லும் காணொலி சிசிடிவி வாயிலாக கிடைத்ததால், அதனை வைத்து கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வந்தனர்.