விருதுநகரில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் தொடங்கி வைத்து தமிழ் மொழியின் சிறப்பு, கீழடி நாகரிக வரலாறு, தமிழ் மொழியிலிருந்து பிறந்த மற்ற மொழிகளின் வரலாறு என தமிழ் மொழியின் தோற்றம், வரலாறு, வளர்ச்சி குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கினார்.
மேலும், தமிழ் மொழியை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்வது நமது கடமை என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதைத்தொடர்ந்து இந்தப் பேரணியில் அன்னை தமிழே ஆட்சி மொழி, தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டம் 1956, உலகிலேயே தொன்மை இனிமை செழுமை உயர்ந்த இலக்கணம் பழமை கொண்ட மொழி நம் தமிழ்மொழி, தமிழில் கையொப்பம் இடுவோம், பிற மொழிகளை வாழவைத்து தன்னையும் காத்து நிற்கும் மொழி நம் தமிழ்மொழி போன்ற பதாகைகளை ஏந்தியபடி கல்லூரி மாணவர்கள் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் பேரணியாகச் சென்றனர்.