விருதுநகர் பாஜக தேர்தல் அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நான்கு லட்சம் ரூபாய்க்கான இலவச விபத்துக் காப்பீட்டு திட்டம் செய்து கொடுப்போம். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா டேப்லட் வழங்கப்படும். இடஒதுக்கீட்டிற்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை.
இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது தனியார் துறை வீரியமாக இல்லை என்பதால் அரசாங்கம் தலையிட்டு எடுத்து அதனைக் கையாள வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் தற்போது தனியார் துறை பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளதால் அரசாங்கம் அந்தச் சுமையை தூக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன் பேட்டி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாகவே ’பிஜேபி ஃபோபியா’, ’மோடி ஃபோபியா’ ஆகிய நோய்கள் உள்ளன. அதனால் தான் எதற்கெடுத்தாலும் மோடியை குறை சொல்லிக் கொண்டே அரசியலை ஓட்டிக்கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்தார்
மேலும் குடியுரிமை சட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இரண்டு சமயம்தான் வாய் திறப்பர்கள். ஒன்று சாப்பிடும்போது, இன்னொன்று பொய் சொல்லும்போது. பாலகிருஷ்ணனின் அறிவு நாணயமற்ற செயல். குடியுரிமைச் சட்டம் என்றால் என்ன என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். சிறுபான்மையின மக்கள் மத்தியில் பீதியை உருவாக்குவதற்காக பாஜகவை குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.