விருதுநகர் மாவட்ட கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று (நவம்பர் 3) சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "வீழ்ச்சியுற்ற தமிழ்நாடு எழுச்சி பெற வேண்டும், இந்திய மாநிலங்கள் மத்தியில் பின்தங்கிய தமிழ்நாட்டின் பெருமையை மீட்க உறுதியெடுக்க வேண்டும். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக விருதுநகரில் ஏற்பட்டுள்ள எழுச்சியை பார்க்கும் போது 234 தொகுதிகளையும் திமுக கூட்டணி பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1787 குடியிருப்புகள் குடிநீர் வசதி பெற்று பயன்பெறும் வகையில் ‘தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், ரூ. 597 கோடி செலவில் திமுக ஆட்சியில் தொடக்கி வைக்கப்பட்டது. காமராஜர் ஆட்சியில் பள்ளிகள் ஏராளமாக திறக்கப்பட்டன என்றால், திமுக ஆட்சியில் கல்லூரிகள் அதிகமாக திறக்கப்பட்டன. காமராஜர் ஆட்சியில் பள்ளிக் கல்வி சிறப்புற்று விளங்கியது என்றால், திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வியோடு கல்லூரிக் கல்வியும், உயர் கல்வியும், மருத்துவக் கல்வியும் சிறந்து விளங்கியது. ஆனால், கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் அதல பாதாளத்துக்கு சென்று விட்டன.