விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை என்ற இடத்தில், தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் மலையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், இக்கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
பொருளாதார நெருக்கடியால் திருப்பதி செல்ல முடியாத மக்கள், இக்கோயிலுக்குச் சென்று தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். இவ்வளவு சிறப்புமிக்க இக்கோயிலின் பிரமோற்சவம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளதால் துணை ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில், கோயிலின் பிரம்மோற்சவம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அதிக அளவு பக்தர்களை அனுமதிப்பதில்லை என்ற அடிப்படையில், தங்களது சொந்த வாகனங்களில் வராமல், அரசு பேருந்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.