விருதுநகர்:பரபரப்பாக நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாதவராவ் (63) போட்டியிடுவார் என கட்சித் தலைமை அறிவித்திருந்தது.
பரப்புரையில் ஈடுபட்ட 2 நாட்களில் உடல்நலக்குறைவு
இதையடுத்து, வேட்புமனு தாக்கல், பரிசீலனை அனைத்தும் முடிவடைந்து இரண்டு நாள்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த மாதவராவ், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு பரப்புரைக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அவரது மகள் திவ்யா மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொண்டார். ஆனால், தொடர்ந்து அவரது உடல்நலம் பாதிக்கப்படவே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தனியார் மருத்துவமனையில் உயிரிழப்பு
பின்னர், கரோனா மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சைப் பெற்று வந்த சமயத்தில் அவருக்கு இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை 7.55 மணியளவில் எதிர்பாராத விதமாக சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.