விருதுநகர்:"சின்ன வயசுல, பள்ளிக்கூடத்துல என்னை விட வயசுல மூத்த அண்ணங்க, நீளமான என்நாக்கை நீட்டி வேடிக்கை காட்டச் சொல்லி கேட்பாங்க. அவங்க வாங்கித் தர்ற மிட்டாய்க்காக நானும் அடிக்கடி அதைச் செய்வேன். இப்போயோசிச்சா அவங்க தான் எனக்குள்ள இருந்த திறமையை கண்டுபிடிச்சவங்கனு தோணுது" வேடிக்கையாக பேசத் தொடங்கும் பிரவீன் தான் இந்தியாவின் நீளமான நாக்கு உடையவர். இவர் தன் நீளமான நாக்கினால் பல சாதனைகளைச் செய்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பழைய பால்பண்ணைத் தெருவில் வசித்து வரும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரவீன். அப்பா காளிராஜன், அம்மா கமலா, தம்பி தீபக். பிரவீன் தனியார் பொறியியல் கல்லூரியில், இயந்திரவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
சிறுவயதில் தன்னைவிட மூத்த அண்ணன்களை மகிழ்விக்க நாக்கை நீட்டி வித்தை செய்திருந்தாலும், பிரவீன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கல்லூரி வந்ததும் நீளமான தன் நாக்கினைக் கொண்டு நண்பர்களை மகிழ்விப்பதைத் தாண்டி, வேறு ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் அவருக்கு உருவாகியிருக்கிறது. விளைவு சாதனை மேல் சாதனை.
தன்னைத் தேடிக் கண்டடைதல்
"அடிப்படையில் நான் ஒரு பாக்ஸர். மாநில அளவில் 27 போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். நான் கொஞ்சம் உயரம் குறைவுங்கிறதால என்னால் அதில் சாதிக்க முடியவில்லை. அதனால சோர்ந்து போய் இருக்கும் போது தான், இயற்கையாகவே நீளமான நாக்கு இருக்கும் நாம் ஏன் அதைவைத்து சாதனை செய்யக் கூடாது எனத் தோன்றியது. நாக்கைக் கொண்டு என்ன என்ன சாதனைகள் செய்யப்பட்டிருக்கிறன எனத் தேடிப் பார்த்து, அதன்படி பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்" தோல்வியில் இருந்து பினீக்ஸ் பறவையாய் தான் மீண்ட கதையை விவரிக்கிறார் பிரவீன்.
கடந்த 2013ஆம் ஆண்டு, ஒரு நிமிடத்தில் 110 முறை நாக்கைக் கொண்டு மூக்கைத் தொட்டு, உத்திரப்பிரதேச மாநிலம் பார்லி நகரைச் சேர்ந்த அமிட் அகர்வாலின், நிமிடத்திற்கு 97 தடவை நாக்கைக் கொண்டு மூக்கைத் தொட்ட சாதனையை முறியடித்தார் பிரவீன்.
அதேபோல, கையை மடித்து வைத்து முழங்கை முட்டியை நாக்கைக் கொண்டு நிமிடத்திற்கு 142 முறை தொட்டு, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த, மேகா குப்தா என்ற பெண்ணின், நிமிடத்திற்கு 140 முறை என்ற சாதனையை முறியடித்தார். இந்த இரண்டு சாதனைகளும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றது.
நாக்கின் நீளம் சராசரியாக ஆண்களுக்கு 8.5 சென்டி மீட்டரும், பெண்களுக்கு 7.9 சென்டி மீட்டர் நீளம் இருக்கும். பிரவீனின் நாக்கின் நீளமோ 10.8 சென்டி மீட்டர் இருக்கிறது.
இந்தியாவின் நீளநாக்கு மனிதர்