பசுமை வீடுகள் திட்டத்தில் சோலார் விளக்குகள்: பணம் வழங்க தேவையில்லை - பசுமை வீடுகள் திட்டம்
விருதுநகர்: பசுமை வீடுகள் திட்டத்தில் சோலார் விளக்குகள் பொருத்த வீட்டு உரிமையாளர்கள் பணமோ பொருளோ வழங்கத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் பல்வேறு வீடுகள் கட்டப்பட்டு சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுவந்தன.
இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் சோலார் விளக்குகள் பொருத்த வீட்டு உரிமையாளர்களிடம் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் இது போன்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் மாவட்ட ஆட்சியர் கண்ணன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் "விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ், 2016-17, 2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட மொத்தம் 1942 வீடுகளுக்கு தற்பொழுது சோலார் விளக்குகள் பொருத்தும் பணி கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தால் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கு தொகை முழுவதும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. எனவே சோலார் விளக்குகள் அமைக்கும் பொழுது வீட்டு உரிமையாளர்கள் பணமோ, பொருளோ வழங்கத் தேவையில்லை" என குறிப்பிட்டுள்ளார்.